ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேற்று ஐசிசி வெளியிட்டு போட்டிக்கான முழு விவரங்களையும் அளித்தது. அதனை நாம் பின்வருமாறு புள்ளி விபரங்களுடன் காண்போம்.
1. டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில், ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் 2018 மார்ச் 31 அன்று முதல் 9 இடங்களைப் பிடித்த அணிகள் மட்டும் பங்கேற்கும். அதன் அடிப்படையில், இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாபிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய 9 அணிகள் பங்கேற்கின்றன.
2. டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர், ஆகஸ்ட் 1ம் தேதி துவங்கி தொடர்ந்து 2 ஆண்டுகள் நடைபெறும். இந்த 9 அணிகளுக்கு இடையே நடைபெற உள்ள 72 போட்டிகள் உள்ளடக்கிய 27 தொடர்களின் முடிவில், புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டியில் மோதும்.
3. இறுதிப் போட்டி ஜூன் 2021ல் இங்கிலாந்தில் நடைபெறும். இதில் வெல்லும் அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை தட்டிச்செல்லும்.
4. ஒவ்வொரு அணியும் சொந்த மண்ணில் 3 டெஸ்ட் தொடர் மற்றும் 3 வெளிநாட்டில் டெஸ்ட் தொடர் என்ற அடிப்படையில் விளையாடவுள்ளன. ஒவ்வொரு தொடரிலும் இடம் பெறும் போட்டிகளின் எண்ணிக்கை குறைந்தபட்சம் 2ல் இருந்து அதிகபட்சம் 5 போட்டிகளாக இருக்கும். ஒரு தொடருக்கு ஒரு அணி அதிகபட்சமாக 120 புள்ளிகள் பெற முடியும்.
5. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒவ்வொரு வெற்றிக்கும் 60 புள்ளிகள் கிடைக்கும். ‘டை’ ஆனால் தலா 30 புள்ளிகளும், டிராவில் முடிந்தால் 20 புள்ளிகளும் அளிக்கப்படும். தோல்வி பெரும் அணிக்கு எவ்வித புள்ளிகளும் அளிக்கப்படாது.
- 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இது வெற்றிக்கு 40 புள்ளிகள், சமனுக்கு 20 புள்ளிகள், டிராவிற்கு 13 புள்ளிகள் என்றும்,
- 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வெற்றிக்கு 30 புள்ளிகள், சமனுக்கு 15 புள்ளிகள், டிராவிற்கு 10 புள்ளிகள் என்றும்,
- 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வெற்றிக்கு 24 புள்ளிகள், சமனுக்கு 12 புள்ளிகள், டிராவிற்கு 8 புள்ளிகள் என்றும் வழங்கப்படும்.