இந்திய அணியில் கேப்டன் பதவி விராட் கோலியிடமிருந்து ரோஹித் சர்மாவிற்கு மாற்றப்பட்டது இந்திய அணியில் ஏதாவது பிரச்சனையை ஏற்படுத்துமா என்ற கேள்விக்கு முகமது சமி விளக்கமாக பதில் அளித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக கடந்த 7 ஆண்டுகள் இருந்துவந்த விராட் கோலி, முதலில் உலக கோப்பை தொடருக்குப் பின் டி20 கேப்டன் பொறுப்பை ராஜினாமா செய்தார்.மேலும் இதனை அடுத்து தென் ஆப்பிரிக்கா அணியுடனான டெஸ்ட் தொடர் முடிவுற்ற பிறகு தனது டெஸ்ட் கேப்டன் பொறுப்பை ராஜினாமா செய்தார். இதற்கு இடையில் ஒரு நாள் போட்டிக்கான கேப்டன் பொறுப்பு அவரிடம் இருந்து பறிக்கப்பட்டு ரோஹித் சர்மாவிடம் கொடுக்கப்பட்டது.
இந்தப் பொறுப்பு மாற்றம் சுமூகமாக நடைபெறாமல் பல சர்ச்சைகளுக்கு பின் நடைபெற்றதால், ஒவ்வொருவரும் இந்திய அணியின் கேப்டன் மாற்றப்பட்டதால் இந்திய அணியில் ஏதாவது பாதிப்பு ஏற்படுமா அல்லது கேப்டன் புதிய ஆளாக இருப்பதால், அது தனிநபரின் திறமையை பாதிக்குமா என்று விவாதித்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி விராட் கோலியிடம் இருந்த கேப்டன் பொறுப்பு ரோஹித் சர்மாவிடம் மாற்றப்பட்டது குறித்து தனது கருத்தை பேசியுள்ளார்.
அதில் பேசிய அவர், ஒரு அணிக்கு நிச்சயம் கேப்டன் என்பவர் முக்கியம், ஆனால் கேப்டன் பொறுப்பு யாரிடம் இருந்தாலும் அது தனிநபரின் திறமையை பாதிக்காது, நாங்கள் விராட் கோலி இருக்கும்பொழுது ரோஹித் சர்மா மற்றும் அஜிங்கிய ரஹானே தலைமையில் விளையாடியுள்ளோம், அப்பொழுது எல்லாம் நாங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் எங்களுடைய பங்களிப்பை சிறப்பாக கொடுப்பதில் மட்டுமே கவனம் செலுத்துவோம். ஏனென்றால் ஒரு தனிநபரின் சிறப்பான ஆட்டம் போட்டியை மாற்றுவதற்கு முக்கிய பங்காற்றும், யார் என்ன செய்தாலும் முடிவு ஒன்றே முக்கியம், என்னைப் பொறுத்தவரையில் யார் கேப்டன் என்பதையெல்லாம் நான் பொருட்படுத்த மாட்டேன் என்னுடைய ஆட்டம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதில் மட்டும்தான் முழு கவனமும் செலுத்துவேன் என்று முகமது சமி பேசியிருந்தார்.