பாகிஸ்தான் அணியுடன் மோதும் போட்டிக்கு இப்பவே பிளேயிங் லெவன் தயாராக இருக்கிறது என்று பேட்டியில் பேசியுள்ளார் ரோகித் சர்மா.
உலக கோப்பை டி20 தொடரின் குவாலிஃபயர் சுற்று இரண்டு பிரிவாக நடைபெற்று வருகிறது. இது முடிந்த பிறகு இரண்டு பிரிவிலும் தலா இரண்டு அணிகள் தேர்வு செய்யப்பட்டு குரூப் 1 மற்றும் குரூப் 2 பிரிவில் சேர்க்கப்படும். அதன் பிறகு அக்டோபர் 22 ஆம் தேதி முதன்மை போட்டி சுற்றுக்கள் துவங்குகிறது.
இந்திய அணிக்கு அக்டோபர் 23ம் தேதி முதல் போட்டி நடைபெறுகிறது. இப்போட்டியில் பாகிஸ்தானை மெல்போன் மைதானத்தில் எதிர்கொள்கிறது. இதற்காக இந்திய அணி கிட்டத்தட்ட 15 நாட்களுக்கு முன்பே ஆஸ்திரேலியா சென்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. நேற்றைய தினம் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் 16 அணிகளின் கேப்டன்கள் சந்திப்பு நேர்ந்தது. அதில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவும் கலந்து கொண்டார்.
அதன் பிறகு பத்திரிக்கையாளர்களுடன் நடைபெற்ற சந்திப்பிலும் ரோகித் சர்மா கலந்து கொண்டிருக்கிறார். அதில் அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு பொறுமையாக பதில் அளித்துவிட்டு சென்றுள்ளார் ரோகித் சர்மா.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியின் எதிர்பார்ப்பு உச்சத்தை பெற்றிருக்கிறது. அதற்கு இந்திய அணி எவ்வாறு தயாராகி வருகிறது? என கேட்கப்பட்ட கேள்விக்கு, “பாகிஸ்தான் அணியுடன் மோதும் இந்தியாவின் பிளேயிங் லெவன் தற்போது தயாராக இருக்கிறது. கடைசி நேரத்தில் வீரர்களை தேர்வு செய்து இவர்கள் மட்டுமே விளையாடுகிறார்கள், மற்றவர்கள் வெளியே என அறிவிப்பது எனக்கு நம்பிக்கை இல்லை. இந்த 11 வீரர்கள் தான் விளையாடுகிறார்கள் என்று முன்னமே முடிவு செய்து அவர்களிடம் தெரிவித்துவிட்டால், அதற்கேற்றவாறு தீவிர பயிற்சி செய்து கொள்வார்கள். இதன் அடிப்படையில் தற்போதே வீரர்களை தேர்வு செய்து விட்டேன். பும்ரா இல்லாதது பின்னடைவு, ஆனால் முகமது சமி மீண்டும் அணிக்குள் வந்திருக்கிறார். அவரது உடல் நிலையும் நல்ல நிலையில் இருக்கிறது. முன்பெல்லாம் 140 முதல் 150 ரன்கள் அடித்தால் எளிதில் கட்டுப்படுத்தி விடலாம். ஆனால் சமீபகாலமாக அது மிக எளிதான ஸ்கோர் ஆக இருக்கிறது. ஆகையால் அதற்கேற்றார் போல அணியின் தேர்வு நடத்தப்பட்டிருக்கிறது.” என்றார்.