2014ம் ஆண்டிற்கு பிறகு மீண்டும் விராட் கோஹ்லியை பழிதீர்க்க முழு முனைப்புடன் காத்திருக்கிறார் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் பிப்ரவரி 5ஆம் தேதி துவங்கி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்திய அணியை பொறுத்தவரை ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு தொடரை கைப்பற்றி வந்ததால் குறிப்பிட்ட வீரர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த அணியாக பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.
அதேநேரம் இங்கிலாந்து அணியை பொறுத்தவரை ஜோ ரூட், ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் மீது தொடர்ந்து எதிர்பார்ப்புகள் வைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக இந்திய அணியை பொறுத்தவரை கேப்டன் விராட் கோலி அதிக ரன் குவிப்பார் என யூகிக்கப்பட்டு வருகிறது.
இந்தியா – இங்கிலாந்து தொடரில் விராட் கோலி மற்றும் ஆண்டர்சன் இருவருக்கும் இடையேயான போட்டி கடுமையாக இருக்கும். கடந்த 2014ஆம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பொழுது விராட் கோலியை நான்குமுறை வீழ்த்தினார். அந்த தொடரில் விராட்கோலி வெறும் 140 நாட்களுக்கும் குறைவாகவே எடுத்திருந்தார். ஆனால் அதற்கு அடுத்த தொடரில் சுதாரித்துக்கொண்ட விராட் கோலி ஆண்டர்சன் பந்தை தெளிவாக எதிர்கொண்டு விக்கெட்டை இழக்காமல் இருந்தார்.

அதேபோல 2018 ஆம் ஆண்டிலும் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் ஆண்டர்சன் வசம் தனது விக்கெட்டை இழக்காமல் விராட் கோலி கவனத்துடன் ஆடியதும் குறிப்பிடத்தக்கது. இந்த ஐந்து ஆண்டுகளில் ஒருமுறைகூட விராட் கோலியை விக்கெட் எடுக்காததால் ஆண்டர்சன் மீது சில விமர்சனங்கள் இருந்துவருகின்றன. இதனை சரிக்கட்டவும் விராட் கோலியை வீழ்த்தி பழி தீர்க்கவும் ஆண்டர்சன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. ஒட்டுமொத்த தொடரை விடவும் இந்த இரு வீரர்களுக்கும் இடையேயான போட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.