தொடர்ந்து சொதப்பி வரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஆண்ட்ரியூ ரசலை முன்னாள் வீரர் பிரக்யான் ஓஜா கடுமையாக சாடியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் இரண்டு முறை கோப்பையை வென்றுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, இந்த தொடரில் கடுமையாக சொதப்பி வருகிறது. இயன் மோர்கன், தினேஷ் கார்த்திக், பேட் கம்மின்ஸ் போன்ற உலகின் தலைசிறந்த வீரர்கள் பலர் அணியில் இருக்கும் நிலையிலும், கொல்கத்தா அணியால் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஒரு வெற்றி கூட பெற முடியவில்லை. ஒவ்வொரு போட்டியிலும் கடுமையாக திணறி வருகிறது.

தொடர் தோல்விகளால் தினேஷ் கார்த்திக்கிடம் இருந்த கேப்டன் பதவி இயன் மோர்கனிடம் ஒப்படைக்கப்பட்டு விட்ட போதிலும் கொல்கத்தா அணியால் வெற்றி பாதைக்கு திரும்ப முடியவில்லை. கடந்த போட்டியில் கொல்கத்தா அணியின் ஒவ்வொரு வெற்றிக்கும் மிக முக்கிய காரணமாக திகழ்ந்த ஆண்ட்ரியூ ரசல் இந்த தொடரின் ஒரு போட்டியில் கூட சிறப்பாக விளையாடாததும் கொல்கத்தா அணியின் தோல்விக்கு ஒரு காரணமாக பார்க்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து சொதப்பி வரும் ஆண்ட்ரியூ ரசலுக்கு, ஆதரவாக சிலரும் எதிர்ப்பாக சிலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், முன்னாள் இந்திய வீரரான பிரக்யான் ஓஜா ஆண்ட்ரியூ ரசலை கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.

இது குறித்து ஓஜா பேசுகையில், “ஆண்ட்ரியூ ரசல் ஒரு முழுமையான கிரிக்கெட் வீரர் இல்லை. அவரது ஆட்டத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை. 4 வருடங்களுக்கு முன்பு ரசல் எப்படி விளையாடினாரோ அப்படியே இன்னமும் விளையாடி வருகிறார், எந்த மாற்றமும் இல்லை, முன்னேற்றமும் இல்லை. இதன் காரணமாக அவர் இப்பொழுது கொல்கத்தா அணியின் சுமையாக உள்ளார். ஒரு கிரிக்கெட் வீரர் தனது விளையாட்டில் முன்னேற்றத்தை ஏற்படுத்தி கொண்டே இருக்க வேண்டும். ஜஸ்ப்ரிட் பும்ராஹ் மும்பை இந்தியனஸ் அணியில் அறிமுகமான போது எப்படி இருந்தார் என்பதையும், இப்பொழுது எந்த இடத்தில் இருக்கிறார் என்பதையும் பாருங்கள் அவர் தனது ஆட்டத்தை முன்னேற்றத்தை ஏற்படுத்தி கொண்டதன் காரணமாகவே இந்த நிலையில் உள்ளார்.” என்று தெரிவித்தார்.