கேப்டனான முதல் போட்டியிலேயே பொளந்து கட்டிய ஆண்ட்ரியூ ரசல்
இந்தியாவின் ஐபிஎல் போல வெஸ்ட் இண்டீசில் கரீபியன் பிரிமியர் லீக் டி20 தொடர் நடந்து வருகிறது. இதிலும் பல்வேறு நாட்டு வீரர்கள் பங்குபெற்று விளையாடி வருகிறார். இன்று அதிகாலை நடந்த போட்டியில், டிவைன் பிராவோ தலைமையிலான டிரின்பாகோ நைட் டைரட்ஸ் அணியும் ஆண்ட்ரூ ரஸல் தலைமையிலான ஜமைக்கா தல்லாவாஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற ஜமைக்கா, முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி, டிரின்பாகோ அணியின் தொடக்க வீரர்களாக சுனில் நரைனும் கிறிஸ் லின்னும் களமிறங்கினார்கள். நரேன் 7 ரன் எடுத்தபோது இமாத் வாசிம் வீசிய பந்தில் பாவெல்லிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து முன்றோ வந்தார். இவரும் லின்னும் சிறப்பாக ஆடினர். லின் 27 பந்தில் 46 ரன் எடுத்திருந்தபோது சண்டோகி பந்துவீச்சில் ஆண்ட்ரூ ரஸலிடம் கேட்ச் ஆனார். அடுத்து மெக்குலம், முன்றோவுடன் இணைந்தார். இருவரும் அதிரடியாக விளாசினர். முன்றோ 42 பந்தில் 61 ரன் எடுத்திருந்தபோது ஸம்பா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
பின்னர் பந்துவீச்சிய ஆண்ட்ரு ரஸல், மெக்குலம் (56), டேரன் பிராவோ (29), ராம்தின் (0) ஆகியோரை அடுத்தடுத்து வீழ்த்தி ஹாட்ரிக் விக்கெட் எடுத்தார். இதையடுத்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்தது.
பின்னர் இந்த கடின இலக்கை நோக்கி ஜமைக்கா தல்லாவாஸ் அணி களமிறங்கியது. கிளன் பிலிப்ஸ் (6), ஜான்சன் சார்லஸ் (24). ஆண்ட்ரே மெக்கர்த்தி (0), ராஸ் டெய்லர் (1),ரோவ்மான் பாவெல் (1) ஆகியோரின் விக்கெட்டை அடுத்தடுத்து இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது.
அடுத்து வந்த கென்னர் லெவிஸூம், கேப்டன் ஆண்ட்ரூ ரஸலும் அணியை சரிவில் இருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ரஸல் தனது அதிரடியை காட்டினார். வந்த பந்துகளை எல்லாம் சிக்சருக்கும் பவுண்டரிக்கும் பறக்கவிட்டு ரசிகர்களை குஷிபடுத்தினார். அவரை எந்த பந்துவீச்சாளராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. 40 பந்தில் சதமடித்த அவர் 49 பந்தில் 121 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல்
Andre Russell hits the fastest century in CPL off just 40 balls #CPL18 #Biggestpartyinsport #TKRvJT pic.twitter.com/H2hAcrsgWm
— CPL T20 (@CPL) August 11, 2018
இருந்தார். இதில் 13 சிக்சர்களும் 6 பவுண்டரிகளும் அடங்கும். லெவிஸ் 51 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதையடுத்து 19.3 ஓவர்களிலேயே 6 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்து ஜமைக்கா தல்லாவஸ் அணி அபார வெற்றி பெற்றது.
ஹாட்ரிக் விக்கெட் மற்றும் 121 ரன்கள் குவித்த ஆண்ட்ரு ரஸல் ஆட்டநாயகன் விருது பெற்றார்.