மிக தவறான முடிவை எடுக்கும் ஆஸ்திரேலியா..? கடுப்பில் ரசிகர்கள்
ஆகஸ்ட் 1ம் தேதி எட்ஜ்பாஸ்டனில் தொடங்கும் ஆஷஸ் 2019 முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் இடது கை வேகப்பந்து வீச்சாளரும் உலகக்கோப்பையின் சிறந்த பவுலருமான மிட்செல் ஸ்டார்க் இருக்க மாட்டார் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இவரோடு மட்டும் அணியில் மாற்றம் நிற்காது என்றும் ஜோஷ் ஹேசில்வுட்டுக்குப் பதிலாக பீட்டர் சிடிலை தேர்வு செய்யவிருக்கிறார்கள் என்றும் ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்திகளை அள்ளித் தெளித்துள்ளன.
தற்போது அபாரமாக வீசி வரும் ஜேம்ஸ் பேட்டின்சன் இடம் நாளை உறுதி என்று தெரிகிறது, ஆகவே பேட்டின்சன், கமின்ஸ், சிடில், லயன் ஆகியோர் அணியில் இடம்பெறுவார்கள் என்று கூறப்படுகிறது, ஆனால் மிட்செல் ஸ்டார்க்கின் கடின உழைப்புக்கு நியாயம் செய்வதாகுமா இந்த முடிவு என்று ஆஸ்திரேலிய வட்டாரங்கள் கேள்வி எழுப்பியுள்ளன.
கடந்த ஆஷஸ் தொடரில் மிட்செல் ஸ்டார்க் 22 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதே தொடரில் கமின்ஸ் 24 விக்கெட்டுகள், ஹேசில்வுட் 21 விக்கெட்டுகள், ஆனால் இந்த மூவர் கூட்டணியில் தற்போது ஒருவருக்கு மட்டுமே இடம் என்கிறார் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர், அதாவது கமின்ஸ் இடம் உறுதியாகியுள்ளது.
மார்ச் 2018லிருந்து ஜோஷ் ஹேசில்வுட்டின் ஃபார்ம் பெரிய அளவில் இல்லை என்பதால் அவர் இடம் முதல் டெஸ்ட்டில் கேள்விக்குறியாகியுள்ளது. மேலும் சிடில் இங்கிலாந்து பிட்ச்களில் கூடுதல் பொருத்தமுடைய வீச்சாளர் என்று அணி நிர்வாகம் கருதுகிறது. சிடில் இங்கிலாந்து கவுண்டி அணியான எசெக்ஸ் அணிக்கு ஆடி 2 சீசன்களில் 71 விக்கெட்டுகளை சமீபமாக எடுத்ததும் சிடிலுக்கு ஆதரவாக உள்ளது.
ஆலன் பார்டர் கூறுகையில், “2001 முதல் ஆஷஸ் தொடர் இங்கிலாந்தில் விளையாடப்படும் போது ஆஸ்திரேலிய பாணி எடுபடவில்லை எனவே இம்முறை முற்றிலும் வேறு வகையான ஒரு கிரிக்கெட் ஆட்ட முறையை கடைபிடிக்கவுள்ளோம். ஸ்டார்க் வேகமாக வந்து வீசி சில விக்கெட்டுகளை வீழ்த்தலாம் ஆனால் அது சரியாக அமையவில்லை எனில் அவர் ரன்களை கொடுக்கும் பவுலராகவே எஞ்சுவார். பீட்டர் சிடில் லைன் மற்றும் லெந்த் துல்லியமானது” என்றார்.