உண்மையில் நாங்கள் தோல்வியுற காரணம் இவர்கள்தான், மூன்றாவது போட்டியில் தோல்வியை தழுவிய பிறகு ஜோ ரூட் வருத்தத்துடன் பேட்டியளித்துள்ளார்.
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆஷஸ் தொடரில் பங்கேற்று வரும் இங்கிலாந்து அணியை துவம்சம் செய்து வருகிறது ஆஸ்திரேலிய அணி. ஆடிய முதல் மூன்று போட்டிகளில் மூன்றையும் கைப்பற்றி, டெஸ்ட் தொடரையும் இங்கிலாந்து அணியிடம் இருந்து தொடர்ந்து இரண்டாவது முறையாக கைப்பற்றியிருக்கிறது.

குறிப்பாக மூன்றாவது போட்டியில் படுமசமாக இங்கிலாந்து அணி தோல்வியுற்றதால் விமர்சனங்கள் கடுமையாக முன்வைக்கப்பட்டு வருகின்றன. முதல் இன்னிங்சில் 82 ரன்கள் பின்தங்கிய நிலையில் விளையாடிய இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் எந்தவித பொறுப்பும் இன்றி வந்த வேகத்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினர். துவக்கம் முதல் இறுதிவரை அந்த அணிக்கு பார்ட்னர்ஷிப் கிடைக்கவில்லை. இதனால் வெறும் 68 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 14 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் தோல்வியை இங்கிலாந்து அணி சந்தித்திருக்கிறது.
இதற்கு முன்னதாக முதல் மற்றும் இரண்டாவது டெஸ்ட் போட்டிகளில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மற்றும் 275 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை முறையே பெற்றிருக்கிறது. இந்த தொடரில் ஜோ ரூட் மட்டுமே தனி ஒருவராக நின்று ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களை சமாளித்து வந்தார். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து தோல்விக்கு முக்கிய காரணமாக இருக்கின்றனர். மேலும் பந்துவீச்சாளர்களை ஜோ ரூட் கையாண்ட விதமும் சரியில்லை என்று விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், போட்டி முடிந்த பிறகு வருத்தத்துடன் பேட்டி கொடுத்திருக்கிறார் ஜோ ரூட்.

“ஆஸ்திரேலிய மைதானங்களில் நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் மைதானத்திற்குள் வந்து முழு கவனத்துடன் விளையாடவேண்டும். அன்றைய நாள் உங்களுக்கானதாக அமைந்தால் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தலாம். இல்லையென்றால் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் தற்போது நடந்ததை போல ஊதித் தள்ளி விடுவார்கள்.
இரண்டாவது இன்னிங்சை நாங்கள் துவங்கிய விதம் எங்களுக்கு சாதகமாக அமையவில்லை. வீரர்களை எந்த விதத்திலும் குறை சொல்ல முடியாது. ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் தொடர்ந்து ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றனர். இதற்கு முன்னர் நடந்ததை யோசிப்பதை விட அடுத்து வரும் 2 போட்டிகளுக்கு நாங்கள் நிறைய உழைக்க வேண்டியதாக இருக்கிறது. ஆகையால் எங்கள் கவனம் அதில் மட்டுமே இருக்கும். இந்த தொடர் முடியும் வரை விமர்சனத்திற்கு செவிசாய்க்க வேண்டாம் என நினைக்கிறேன்.” என்றார்.