டாஸ் வென்று பவுலிங் எடுத்த நாங்கள் இந்த இடத்தில் சில தவறுகளை செய்து விட்டோம். அதுதான் எங்களுக்கு தோல்வியை பெற்றுத் தந்திருக்கிறது என்று சற்று வருத்தத்துடன் பேசியுள்ளார் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ்.
371 ரன்கள் இலக்கை இரண்டாவது இன்னிங்சில் துரத்திய இங்கிலாந்து அணி 45/4 எனும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது. அப்போது இரண்டாவது இன்னிங்சில் அபாரமாக விளையாடி 155 ரன்கள் அடித்து இறுதிவரை போராடிய பென் ஸ்டோக்ஸ், போட்டி முடிந்த பிறகு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:
ஹெட்டிங்லே மைதானத்தில் செய்ததைப் போலவே இங்கேயும் செய்ய நினைத்தேன். கடைசியில் முடிக்க முடியாமல் போனது சற்று வருத்தத்தை கொடுக்கிறது. அதற்குள் ஆஸ்திரேலியா தங்களது திட்டங்களை மாற்றி விட்டார்கள். ஆகையால் நானும் அதற்கேற்றார் போல் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டது. சில நேரங்களில் ரிஸ்க் எடுக்க வேண்டிய அவசியமும் இருந்தது.
இவ்வளவு தூரம் போராடியும் தோல்வியைத் தழுவியதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இருப்பினும் இங்கிலாந்து அணிக்கு இது சிறந்த போட்டி. இதற்காக வீரர்கள் தலைகுனிய தேவையில்லை.
0-2 என்று இருக்கிறோம். இன்னும் மூன்று போட்டிகள் இருக்கிறது. இதற்கு முன்பு பாகிஸ்தான் அணிக்கு எதிராக 3-0, நியூசிலாந்து அணிக்கு எதிராக 3-0 என்று வென்றிருக்கிறோம். இன்னும் எங்களுக்கு வாய்ப்புகள் இருக்கின்றது.
டாஸ் வென்று பவுலிங் எடுத்திருந்தோம். முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியாவை 300 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியிருக்க வேண்டும். துரதிஷ்டவசமாக நிறைய பந்துகள் நூலிலையில் பேட்டில் படாமல் சென்றுகொண்டிருந்தது. இது மிகவும் எரிச்சலூட்டியது.
பவுலர்களை ஒருபோதும் குறை சொல்ல மாட்டேன். அவர்கள் இறுதி வரை போராடினார்கள். அவர்கள் கொடுத்த பங்களிப்பு மற்றும் செயல்பட்ட விதத்தில் துளியும் தவறில்லை. கடைசியில் தோல்வியை தழுவிவிட்டோம். இதிலிருந்து நாங்கள் எடுத்துக் கொள்ளக்கூடிய விஷயங்கள் நிறைய இருக்கிறது.
பேஸ்பால் கிரிக்கெட் மோசமானது என்று கூறுவது சற்று எளிது. ஆனால் நாங்கள் அதை நன்றாக செயல்படுத்தி வருகிறோம். ஒரு சில தவறுகளுக்காக எங்களது திட்டத்தை நாங்கள் மாற்றிக்கொள்ளப் போவதில்லை. தவறுகளை சரி செய்வோம். அதேநேரம் எங்களது அணுகுமுறையிலும் தெளிவாக இருக்கிறோம்.
பேட்ஸ்மேன்களை நாங்கள் அதிரடியாக விளையாட வேண்டும் என்று வலியுறுத்தவில்லை. ஒருவேளை அவர்கள் அதிரடியாக விளையாடும் பட்சத்தில் நானும் பயிற்சியாளரும் பக்கபலமாக இருப்போம். இதுதான் வீரர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அறிவுரை. அவர்கள் அவர்களாகவே ஆடுகிறார்கள்.” என்றார்.