ஷ்ரேயாஸ் மற்றும் அஸ்வின் ஜோடி இறுதிவரை போராடி இரண்டாவது டெஸ்டில் இந்திய அணிக்கு வெற்றியை பெற்று தந்திருக்கிறது.
மிர்பூர் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் பலப்பரிட்சை மேற்கொண்டன.
முதல் நாள் ஆட்டத்தில் வங்கதேச அணியை 227 ரன்கள் ஆல் அவுட் செய்தது இந்திய அணி. அந்த அணிக்கு மொமினுள் ஹக் மட்டுமே நம்பிக்கை அளிக்கும் விதமாக போராடினார். மற்ற வீரர்கள் எவரும் பெரிதளவில் சோபிக்கவில்லை. அவர் 84 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். இந்திய அணிக்கு பந்துவீச்சில் கலக்கிய உமேஷ் யாதவ் மற்றும் அஸ்வின் இருவரும் தலா நான்கு விக்கெடுகளை கைப்பற்றினார்.
இந்நிலையில் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு கேஎல் ராகுல் மற்றும் சுப்மன் கில் இருவரும் விரைவாக ஆட்டம் இழக்க, விராட் கோலியும் நிலைத்து ஆடவில்லை. ரிஷப் பன்ட் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் முக்கியமான கட்டத்தில் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடி பாட்னர்ஷிப் அமைத்தனர்.
இந்த ஜோடியால் இந்திய அணியின் ஸ்கோர் 200 ரன்களை கடந்தது. துரதிஷ்டவசமாக ரிஷப் பண்ட் 93 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். ஷ்ரேயாஸ் ஐயரும் 87 ரன்களுக்கு அவுட் ஆக, 314 ரன்கள் இந்திய அணி ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 87 ரன்கள் முன்னிலை பெற்றது.
பங்களாதேஷ் அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 231 ரன்கள் ஆல் அவுட் ஆனது. லிட்டன் தாஸ் 73 ரன்கள் அடித்தார். ஜாகிர் ஹாசன் 51 ரன்கள் அடித்தார். பந்துவீச்சில் அக்ஸர் 3 விக்கெட்டுகளையும் அஸ்வின் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 145 ரன்கள் இந்திய அணிக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
சுப்மன் கில், கேஎல் ராகுல், புஜாரா விராட் கோலி ஆகியோர் இரட்டை இலக்க ரன்கள் கூட எட்ட முடியாமல் ஆட்டம் இழந்தனர். அக்சர் பட்டேல் 34 ரன்கள் அடித்து நம்பிக்கை கொடுத்தார்.
மற்ற வீரர்களே அனைவரும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். 74 ரன்களுக்கு இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து மிகவும் தடுமாறியது. அந்த தருணத்தில் எட்டாவது வீரராக களம் இறங்கிய ரவிச்சந்திரன் அஸ்வின் ஸ்ரேயாஸ் ஐயருடன் பாட்னர்ஷிப் அமைத்து நிதானமாக விக்கெட் விடாமல் பார்த்துக் கொண்டார்.
இந்திய அணி 100 ரன்கள் கடந்த பிறகு, அணுகுமுறை வேறுமாறியாக மாறியது. அதிரடியை வெளிப்படுத்த துவங்கியது. இந்த ஜோடியின் விக்கெட்டை வீழ்த்த முடியாமல் வங்கதேச வீரர்கள் திணறினார்கள். கடைசியில் அஸ்வின் போட்டியை தலைகீழாக மாற்றி, இந்திய அணிக்கு வெற்றியை பெற்றுத் தந்தார். அவர் 42 ரன்களும் ஷ்ரேயாஸ் 29 ரன்களும் அடித்து களத்தில் ஆட்டம் இழக்காமல் இறுதிவரை நின்றனர். இறுதியில் இந்திய அணி 145 ரன்கள் இலக்கை எட்டி மூன்று விக்கெடுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடரையும் 2-0 என கைப்பற்றியது.