ஜடேஜாவிற்கு பதிலாக சஹல் உள்ளே மாற்று வீரராக எடுத்து வந்தது குறித்து பேசியிருக்கிறார் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச்.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி கான்பெரா மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்திருந்தது. இதனையடுத்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி குறிப்பிட்ட இலக்கை துரத்த முடியாமல் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதனால் முதல் டி20 போட்டியில் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணியில் கீழ் வரிசையில் களமிறங்கி சிறப்பாக விளையாடிய ஜடேஜா 44 ரன்கள் அடித்திருந்தார். அவர் பேட்டிங் செய்து கொண்டிருக்கையில், ஸ்டார்க் வீசிய பந்து அவரது தலையில் பட்டதால் அவருக்கு தலையில் கலக்கம் ஏற்பட்டிருக்கிறது. அதனால் இரண்டாம்பாதி அவரால் விளையாட முடியவில்லை.
ஐசிசி விதிமுறைப்படி ஜடேஜாவுக்கு பதிலாக உள்ளே சஹல் எடுத்து வரப்பட்டார். இந்த சம்பவம் சிறிது சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. இது குறித்து முன்னாள் வீரர்கள் பலர், உரிய பரிசோதனைகள் மேற்கொள்ளாமல் எப்படி மற்றொரு வீரரை உள்ளே எடுத்து வரலாம். முறையான விதிமுறையை பின்பற்றவில்லை என தனது கருத்தை தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் போட்டி முடிந்த பிறகு இது குறித்து பேசிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பின்ச் கூறுகையில், “ஜடேஜாவிற்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது மருத்துவ குழு அவரை வெளியில் அமர வைக்கும்படி கூறினர். மருத்துவர்களின் பேச்சை தட்ட முடியாது. ஆகையால் அவர்கள் அறிவுறுத்தலின்படி, மாற்று வீரரை உள்ளே கொண்டுவர அனுமதித்தோம். மற்றபடி நாங்கள் சரியாக விளையாடவில்லை. மிடில் ஆர்டரில் சில பவுண்டரிகளை அடித்திருக்க வேண்டும். அதனை செய்யத் தவறிவிட்டோம். அதுதான் தோல்விக்கு காரணம் என நினைக்கிறேன். மற்றபடி இந்த விஷயத்தை நான் பேசுவதற்கு ஒன்றுமில்லை.” என்றார்.