இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி திட்டமிட்டப்படி நடைபெறும் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியும் வெற்றியும் பெற்ற நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.
கொரோனாவால் ஏற்பட்ட பல பிரச்சனைகளையும் தாண்டி இரு அணிகள் இடையேயான முதல் மூன்று போட்டிகள் ஒருவழியாக நடந்து முடிந்தாலும், கடைசி டெஸ்ட் போட்டி நடக்குமா இல்லையா என்பது மட்டும் தொடர்ந்து கேள்விக்குறியாகவே இருந்தது.

நான்காவது டெஸ்ட் போட்டி 15ம் தேதி நடைபெற இருக்கும், பிரிஸ் பேனில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டு இருக்கின்றன. வீரர்கள் மைதானம், ஓட்டல் அறையை தவிர வேறு எங்கும் செல்ல முடியாது. ஓட்டலில் தங்கி இருக்கும்போது தங்களது தளத்தை விட்டு வேறு தளத்துக்கு சென்று வீரர்களை கூட சந்திக்க முடியாது என்று கூறப்படுகிறது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த விதிக்கப்பட்டு இருக்கும் நடைமுறைகளை மதித்து செயல்படுவதாக இருந்தால் மட்டுமே இந்திய அணி பிரிஸ்பேன் வரலாம். இல்லையென்றால் இங்கு வரவேண்டாம் என்று அந்த மாகாண சுகாதாரதுறை எச்சரித்து இருந்தது.
இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இரு அணிகள் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி நடைபெறுமா இல்லையா என்பதில் சந்தேகம் நீடித்து வந்த நிலையில், தற்போது ஆஸ்திரேலிய அணி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி இரு அணிகள் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி திட்டமிட்டப்படி நிச்சயம் நடைபெறும் என தெரியவந்துள்ளது.

இதை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரி நிக் ஹோக்ளே தெரிவித்தார்.
இது தொடர்பாக இந்தியா, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியங்களுக்கு இடையே சுமூகமான உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அதன்படி இந்திய அணி நாளை பிரிஸ்பேன் புறப்பட்டு செல்லும்.