மரண அடி… 100 வது இரட்டை சதம் அடித்து வரலாற்றில் இடம்பிடித்த டேவிட் வார்னர்
தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னர் இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார்.
ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததை தொடர்ந்து, முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்ரிக்கா அணி தனது முதல் இன்னிங்ஸில் 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
ஆஸ்திரேலிய அணி சார்பில் அதிகபட்சமாக க்ரீன் 5 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதன்பின் முதல் இன்னிங்ஸை துவங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு உஸ்மான் கவாஜா 1 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தாலும், மற்றொரு துவக்க வீரரான டேவிட் வார்னர் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ஸ்டீவ் ஸ்மித்துடன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் வார்னர், தனது 100வது டெஸ்ட் போட்டியான இந்த போட்டியில் சதம் அடித்தது மட்டுமல்லாமல் சதத்தை இரட்டை சதமாகவும் மாற்றி வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதை போன்ற ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் வார்னர், 254 பந்துகளில் 2 சிக்ஸர் மற்றும் 16 பவுண்டரிகளுடன் 200 ரன்கள் குவித்தார்.
100வது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்ததன் மூலம், 100வது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்து முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை டேவிட் வார்னர் பெற்றுள்ளார். ஒட்டுமொத்த இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்டிற்கு அடுத்தபடியாக 100வது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையும் டேவிட் வார்னரையே சாரும்.