இந்த விக்கெட் கீப்பரை ஏன் அணியில் எடுக்கவில்லை என முன்னாள் வீரர்கள் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு நடுவரிசை பேட்டிங்கில் மிகச் சிறப்பாக செயல்பட்டவர் அலெக்ஸ் கேரி. விக்கெட் கீப்பராகவும் அலெக்ஸ் கேரியின் செயல்பாடு சிறப்பாக இருந்தது. ஓரிரு போட்டிகளில் ஆஸ்திரேலியா அணியின் துவக்க வீரர்கள் மிகவும் தடுமாறி விக்கெட்டுகளை இழந்தபோது நடுவரிசையில் களம் இறங்கி நிலைத்து ஆடி அணிக்கு ரன்களை சேர்த்தார்.
மேலும் விக்கெட் கீப்பிங் களும் மிகச் சிறப்பாக செயல்பட்டு ரன்களை கட்டுப்படுத்தியதால், உலகக்கோப்பை தொடரில் இரண்டாவது சிறந்த விக்கெட் கீப்பர் என பலராலும் புகழப்பட்டார்.

இந்நிலையில், உலகக்கோப்பையை அடுத்து ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்து அணியுடன் ஆஷஸ் தொடரில் மோத இருக்கிறது.
ஆகஸ்ட் 1ம் தேதி துவங்க இருக்கும் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் ஆடுவதற்கான ஆஸ்திரேலிய அணி வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டது.
17 பேர் கொண்ட இந்த பட்டியலில் அலெக்ஸ் கேரி குறைந்தபட்சம் இரண்டாவது விக்கெட் கீப்பராக இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இவர் நிச்சயம் இடம் பெறுவார் என பல முன்னாள் வீரர்களும் தங்களது கணிப்பில் தெரிவித்து வந்த நிலையில், ஆஷஸ் தொடரில் கேரிக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

இது குறித்து பேசிய ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக், “உலகக் கோப்பையில் அவ்வளவு பிரமாதமாக விளையாடியும் 2-வது சிறந்த விக்கெட் கீப்பராக இருந்த பிறகும் அலெக்ஸ் கேரியைத் தேர்வு செய்யாதது அதிர்ச்சியளிக்கிறது” என்று தன் கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
இதே போன்ற ஆச்சர்யத்தையும் வருத்தத்தையும் ஆஸ்திரேலியாவின் முன்னாள் சுழற்பந்துவீச்சு ஜாம்பவான் ஷேன் வார்னே வெளிப்படுத்தியுள்ளார்.