இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியையும் ஆஸ்திரேலிய அணி வென்றுள்ளது.
அடிலெய்டில் சனிக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 149 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 442 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. இதையடுத்து, தனது முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 227 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக ஓவர்டன் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். முதல் இன்னிங்ஸில் 215 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா 2-ஆவது இன்னிங்ஸில் 58 ஓவர்களில் 138 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 2-ஆவது இன்னிங்ஸில் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்
இங்கிலாந்து வீரர் ஆண்டர்சன். அடுத்தபடியாக வோக்ஸ் 4 விக்கெட்டுகளையும், ஓவர்டன் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்.

இதையடுத்து, 354 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து ஆட்ட நேர முடிவில் 176 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து வசம் இன்னும் 6 விக்கெட்டுகள் கைவசம் உள்ள நிலையில், இன்னும் 178 ரன்கள் எடுத்தால் அந்த அணி வெற்றி பெறும். இதனால் மிகவும் பரபரப்பான முறையில் கடைசி நாளை ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள்.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் அற்புதமான பந்துவீச்சால் இங்கிலாந்து 84.2 ஓவர்களில் 233 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரூட், 67 ரன்களில் ஹேஸில்வுட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் இங்கிலாந்து அணியால் தோல்வியைத் தவிர்க்கமுடியாமல் போனது. ஆஸ்திரேலிய அணி 120 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியத் தரப்பில் ஸ்டார்க் 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.

5 டெஸ்டுகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா 2-0 என முன்னிலை வகிக்கிறது.
ஆஷஸ் தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.