சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு முடிவை அறிவித்திருக்கிறார் ஆரோன் பின்ச்.
ஆஸ்திரேலியா அணியின் டி20 கேப்டனாக இருந்து வரும் ஆரோன் பின்ச்-க்கு தற்போது 36 வயதாகிறது. சுமார் 12 வருடங்களாக ஆஸி., அணிக்காக டி20 கிரிக்கெட் போட்டிகளில் ஆடிவருகிறார்.
பின்ச் கடந்த 2022 செப்டம்பர் மாதம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு முடிவை அறிவித்துவிட்டு, டி20 போட்டிகளுக்கு மட்டும் கேப்டனாக இருந்து வந்தார்.
ஆஸ்திரேலியா மண்ணில் நடந்த டி20 உலககோப்பைக்கும் அணியை வழிநடத்தி சென்றார். ஆனால் ஆஸி., அணிக்கு எதிர்ப்பார்த்த வகையில் உலகக்கோப்பை தொடர் அமையவில்லை.
இந்நிலையில், இனி டி20 அணியில் வாய்ப்புகள் கிடைப்பது கடினம் மற்றும் 2024ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை வரை என்னால் டி20 போட்டிகளில் விளையாட முடியாது. ஆகையால், சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
“புதிய வீரர்களுக்கு இடத்தை விட்டுட்டு வெளியேற இதுதான் சரியான நேரம். டி20 போட்டிகளில் இருந்து விலகிக்கொள்கிறேன். அணிக்கு புதிய கேப்டன் நியமிக்கப்பட்டு, புதிய பாதையில் வழிநடத்தி செல்லவேண்டும்.”
“2024ம் ஆண்டு டி20 உலககோப்பையில் என்னால் விளையாட முடியாதென தெரிந்து கொண்டேன். ஆகையால் இந்த முடிவை எடுத்துவிட்டேன். அணி நிர்வாகம் புதிய கேப்டனை நியமித்து, டி20 உலககோப்பைக்கு என்று திட்டங்களை வகுக்க இதுதான் சரியான நேரமும் கூட.”
“12 வருடங்கள் ஆஸி., அணிக்காக விளையாடியதும், சில தலைசிறந்த வீர்ர்களுடன் விளையாடியதையும் என் வாழ்நாள் பெருமையாக கருதுகிறேன். 2021ம் ஆண்டு முதல்முறையாக டி20 உலகக்கோப்பை வென்றது மற்றும் 2015ம் ஆண்டு ஒருநாள் போட்டிகளுக்கான உலகக்கோப்பை வென்றது இரண்டும் என் வாழ்நாள் முழுவதும் நினைத்து மகிழக்கூடிய நிகழ்வுகள் ஆகும்.” என்று டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு முடிவை அறிவித்தப்பின் உணர்வுபூர்வமாக ஆரோன் பின்ச் பகிர்ந்துகொண்டார்.
2011ம் ஆண்டு டி20 போட்டிகளில் அறிமுகமான ஆரோன் பின்ச், இதுவரை ஆஸி., அணிக்காக 103 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 2021ம் ஆண்டு முதன்முறையாக டி20 உலகக்கோப்பை வென்ற ஆஸி., அணிக்கு கேப்டனாக இருந்திருக்கிறார்.
சர்வதேச டி20 போட்டிகளில் இன்னிங்சில் தனிநபரின் அதிகபட்ச முதல் இரண்டு ஸ்கொர்கள் இவரிடம் உள்ளது. 2013ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 156 ரன்கள் அடித்தார். அதன்பின், தனது சொந்த சாதனையை முறியடித்து, 2018ம் ஆண்டு ஜிம்பாப்வே அணிகெதிராக 172 ரன்கள் அடித்தார். இந்த இரண்டு ஸ்கொர்கள் டி20 வரலாற்றில் முதல் இரண்டு அதிகபட்ச ஸ்கொர்களாக இன்றளவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.