இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வெற்றி பெற இதனை செய்யவிருப்பதாக ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார்.
இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் மோதிய முதல் 2 டி20 போட்டிகளில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இன்னும் மூன்றாவது டி20 போட்டி மட்டுமே மீதம் இருக்கும் நிலையில் பலரும் ஆவலாக எதிர்பார்த்துக் காத்திருக்கும் டெஸ்ட் தொடர் வருகிற டிசம்பர் 17ஆம் தேதி துவங்கவிருக்கிறது.
டி20 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரர்கள் காயம் காரணமாக வெளியில் அமர்ந்திருந்தனர். குறிப்பாக கேப்டன் ஆரோன் பின்ச், ஹேசல்வுட், பேட் கம்மின்ஸ் ஆகியோர் காயம் காரணமாக வெளியில் அமர்ந்திருந்தனர். அதேபோல் ஒருநாள் தொடரில் காயம் ஏற்பட்டிருந்த ஆல்ரவுண்டர் ஸ்டாய்நிஸ் இரண்டாவது டி20 போட்டிக்கு உள்ள எடுத்துவரப்பட்டிருந்தார். அவரும் டெஸ்ட் தொடருக்கு முழுவதுமாக தயாராகவில்லை.
இப்படி முன்னணி வீரர்கள் பலர் காயத்தில் இருப்பதால் ஆஸ்திரேலிய அணிக்கு சாதகமாக டெஸ்ட் தொடர் அமையுமா? என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து பேசிய பயிற்சியாளர் லங்கர் கூறுகையில், “நாங்கள் இதுகுறித்து தீவிர ஆலோசனை நடத்தி வருகிறோம். எங்கள் முழு கவனமும் எந்த வீரரை சரியான இடத்தில் எடுத்து வருவது என்பது பற்றித்தான். அதற்காக தற்போது இருந்தே வீரர்கள் மேல் கவனம் வைத்து வருகிறோம்.” என்றார்.
டெஸ்ட் தொடருக்கு வார்னர் முக்கிய பங்களிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் இன்னும் காயத்திலிருந்து முழுமையாக மீளவில்லை. வார்னரின் உடல்நிலையை குறிப்பிட்டுப் பேசிய லாங்கர், “காயத்தில் இருக்கும் வீரர்கள் உடல்நிலை அவ்வப்போது கவனிக்கப்பட்டு வருகிறது. நல்ல நிலையில் குணமடைந்து வருகிறார்கள். ஆனால் முதல் டெஸ்ட் போட்டியில் வார்னரின் இடம் சந்தேகத்திலேயே இருக்கும். அதைபோல் பேட் கம்மின்ஸ் நன்கு குணமடைந்து வந்தாலும் அவர் முழுத் தகுதியுடன் இருப்பார் என கூற இயலவில்லை.
ஆகையால் இன்னும் சில வீரர்களை உள்ளே கொண்டுவந்து தனிமைப்படுத்துதலில் இருக்க வைத்துள்ளோம். முன்னணி வீரர்கள் காயம் காரணமாக வெளியில் அமரும்பொழுது அந்த வீரர்களை பயன்படுத்திக் கொள்வோம். இந்திய அணிக்கு எதிராக எங்களிடம் தற்போது இந்த திட்டம் மட்டுமே இருக்கிறது. பலமிக்க அவர்களை எதிர்கொள்ள குறிப்பிட்ட நேரத்திலேயே திட்டங்கள் வகுக்க உள்ளோம்.” என்றார்.