மும்பை இந்தியன்ஸ் அணியிடமும் அசிங்கப்பட்ட ஆஸ்திரேலிய கேப்டன்
ரோஹித் சர்மாவை சீண்டிய ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன்னை மும்பை இந்தியன்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் கிண்டலடித்துள்ளது.
இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸை 443 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி வெறும் 151 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. இதையடுத்து 292 ரன்கள் என்ற வலுவான முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 48 ரன்கள் எடுத்துள்ளது.

இந்த போட்டியில் இந்திய அணியின் முதல் இன்னிங்ஸில் ரோஹித் சர்மா நிதானமாக பேட்டிங் ஆடிக்கொண்டிருந்தார். வழக்கமாக அவசரப்பட்டு தூக்கி அடித்து அவுட்டாகும் ரோஹித், அந்த இன்னிங்ஸில் மிகவும் நிதானமாக ஆடினார். அதனால் அவரை தூண்டிவிடும் வகையில் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் மற்றும் ஃபின்ச் இருவரும் ரோஹித்தை சீண்டினர்.
ரோஹித் மட்டும் இந்த மைதானத்தில் சிக்ஸர் அடித்துவிட்டால், நான் மும்பை இந்தியன்ஸ் அணியின் ரசிகராகிவிடுகிறேன் என்று டிம் பெய்ன் சீண்டினார். மிட் ஆன் ஃபீல்டரை பின்னுக்குத் தள்ளுகிறேன், நீங்கள் ஐபிஎல்லைப் போல சிக்ஸர் அடியுங்கள் என்று ஃபின்ச் சீண்டினார். இருவரும் சுற்றிநின்று தூண்டிவிட, அவர்களின் சூட்சமத்தை புரிந்துகொண்ட ரோஹித், அதைப்பற்றியெல்லாம் பொருட்படுத்தாமல் தொடர்ந்து நிதானமாக ஆடி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 63 ரன்கள் எடுத்திருந்தார்.

இந்நிலையில், தன்னை ஸ்லெட்ஜிங் செய்தது குறித்து பேசியுள்ள ரோஹித் சர்மா, அவர்கள் பேசியது எனக்கு கேட்டது. ஆனால் எனது முழு கவனமும் அந்த நேரத்தில் பேட்டிங்கில் மட்டும்தான் இருந்தது. டிம் பெய்ன் மட்டும் இங்கு சதமடித்துவிட்டால், அவரை மும்பை இந்தியன்ஸ் அணியில் எடுக்குமாறு அணி உரிமையாளரிடம் பரிந்துரைக்கிறேன் என்று ரஹானேவிடம் கிண்டலாக தெரிவித்தேன் என்றார் ரோஹித்.
”If he (Paine) gets a hundred here, I will put in a word about him to my boss at Mumbai Indians and we'll buy him. Looks like he's a fan of Mumbai." – @ImRo45
Tim Paine: c Pant b Jadeja – 26 (67) #CricketMeriJaan #AUSvIND pic.twitter.com/c36xdjZRYW
— Mumbai Indians (@mipaltan) December 29, 2018
இந்நிலையில், இந்த போட்டியில் டிம் பெய்ன் சதம் அடிக்காமல் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து வெளியேறியதால் குஷியான மும்பை இந்தியன்ஸ் அணியும் தன் பங்கிற்கு தனது ட்விட்டர் பக்கம் மூலம் டிம் பெய்ன்னை கிண்டலடித்து வருகிறது. மும்பை ரசிகர்களும் மும்பை இந்தியன்ஸ் அணியின் இந்த ட்வீட்டை வெறித்தனமாக ஷேர் செய்து வருகின்றனர்.