இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வார்னர் ஆடுவது சந்தேகமான பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்திருக்கிறார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. முதல் 2 போட்டிகளிலும் தோல்வியை தழுவிய இந்திய அணி ஒருநாள் தொடரை இழந்தது. தற்போது 3வது ஒருநாள் போட்டி வருகிற டிசம்பர் 2ஆம் தேதி கான்பெரா மைதானத்தில் நடைபெறவிருக்கிறது.
இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது பீல்டிங் செய்து கொண்டிருக்கையில் வார்னர் திடீரென கீழே விழுந்தார். மருத்துவக்குழு உள்ளே வந்து அவரை வெளியில் அழைத்துச் சென்றனர். நேரடியாக மருத்துவமனைக்கு கார் மூலம் அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்தபோது காயம் தீவிரமாக இருந்தது கண்டறியப்பட்டது. இது குறித்து அணி நிர்வாகத்திடம் உரிய தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.
காயம் காரணமாக மூன்றாவது ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகளிலும் அவர் ஆட மாட்டார் என திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுவிட்டது.
இந்நிலையில் வருகிற டிசம்பர் 17ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டி துவங்கவிருக்கிறது. அதற்குள் அவர் குணமடைந்து விட்டால் டெஸ்ட் போட்டிகளில் விளையாட வாய்ப்புகள் உள்ளது. இல்லையெனில் முதல் டெஸ்ட் போட்டியிலும் அவர் ஆடுவது சந்தேகம் என அதிர்ச்சி தரும் விதமாக பேசியிருக்கிறார் அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர். அவர் கூறுகையில்,
“அவரை நான் சந்தித்தபோது மிகுந்த காயத்துடன் காணப்பட்டார். மருத்துவர்களிடம் விசாரித்தபோது அவரது இடுப்புக்கு கீழ் பகுதியில் இருக்கும் எலும்பு மற்றும் தசை இரண்டும் தீவிர காயத்துடன் இருந்தன. அவரால் குறைந்தபட்சம் இரண்டு வாரங்களுக்கு விளையாட முடியாது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த தகவலின்படி அவரது காயத்தின் வீரியத்தைப் பார்க்கையில் அவரால் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுவது மிகவும் கடினம் என நினைக்கிறேன். ஏனெனில் அவர் குணமடைந்துவிட்டு அணிக்கு திரும்பினாலும், 5 நாட்கள் டெஸ்ட் போட்டியில் விளையாட வேண்டும் என்பதால் அதற்குள் அவர் மீண்டும் காயமடைய வாய்ப்புகள் இருக்கின்றன. அதனால் அவரை முதல் போட்டியில் வெளியில் அமர்த்துவது குறித்து ஆலோசனை செய்து வருகிறோம்.” என குறிப்பிட்டார்.