இந்திய அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை பெற்றதற்கு காரணம் என்னவென்பது குறித்து போட்டி முடிந்த பிறகு கருத்து தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய உலகக்கோப்பை லீக் போட்டியில், பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் பிடிக்க முடியாமல் 42.5 ஓவர்களில் 191 ரன்கள் மட்டுமே அடித்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கேப்டன் பாபர் அசாம் 50 ரன்கள், முகமது ரிஸ்வான் 49 ரன்கள் அடித்திருந்தனர்.
192 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் துவக்க வீரர்களாக களம் இறங்கி அதிரடியாக ஆரம்பித்தனர். கில் மற்றும் விராட் கோலி விரைவாக விக்கெட்டை இழந்தனர்.
அரைசதம் கடந்த பிறகும் அதிரடியாக ஆடிவந்த ரோகித் சர்மா துரதிஷ்டவசமாக 86 ரன்களுக்கு அவுட் ஆகினார் இவர் 6 கவுண்டர்கள் மற்றும் ஆறு சிக்ஸர்கள் விளாசி இருந்தார். கடைசி வரை நின்று ஆட்டத்தை முடித்துக் கொடுத்த ஷ்ரேயாஸ் ஐயர்(53) அரைசதம் அடித்தார்.
30.3 ஓவர்களில் 192 ரன்கள் அடித்து இலக்கை எட்டிய இந்திய அணி, இறுதியாக 7 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது. 6 புள்ளிகள் பெற்று நல்ல 2 ரன்ரேட்டுடன்புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கும் இந்திய அணி முன்னேறி உள்ளது.
போட்டியை இழந்த பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் இந்த தோல்விக்கான காரணங்கள் குறித்து கருத்து தெரிவித்தார். அவர் பேசியதாவது:
“எங்களுக்கு நல்ல துவக்கம் கிடைத்தது. நானும் இமாம் உல் ஹக்கும் நன்றாக ஆரம்பித்தோம். அதன்பிறகு நான் மற்றும் ரிஸ்வான் இருவரும் சாதாரண ஷாட்கள் விளையாடினால் போதும் என்றும் நினைத்தோம். ஒரு கட்டத்தில் 270 280 ரன்கள் வரும் என்று கருதினேன். தவறு செய்துவிட்டோம். அதேபோல் புதிய பந்தில் நாங்கள் சிறப்பாக பந்து வீசவில்லை. ரோகித் சர்மா விளையாடிய ஆட்டத்தினால் எங்களால் மீண்டும் ஆட்டத்திற்குள்ளேயே வர முடியவில்லை. தலைசிறந்த வீரர் அவர்.” இவ்வாறாக பாபர் அசாம் பேசினார்.