இதுக்கு மேலயும் பொறுமையா இருக்க மாட்டாங்க… இது தான் தம்பி உனக்கு கடைசி வாய்ப்பு; ரிஷப் பண்ட்டிற்கு எச்சரிக்கை
பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் ரிஷப் பண்ட் மோசமாக செயல்பட்டால், அதுவே அவருடைய கடைசி போட்டியாக இருக்கும் என ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
சமீபகாலமாகவே பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட முடியாமல் தவித்து வரும் இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் அடுத்தடுத்த போட்டிகளில் வாய்ப்பு கிடைத்தும் மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறார்.
இருந்த போதும் இவர் மீது அதீத நம்பிக்கை வைத்திருக்கும் இந்திய அணி, அடுத்தடுத்த வாய்ப்புகளை வழங்கிக் கொண்டே வருகிறது. குறிப்பாக உலகக்கோப்பை தொடர் மற்றும் அதனை ஓட்டி நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடர் என அனைத்து தொடர்களிலும் மோசமாக செயல்பட்டாலும்,இந்திய அணி இவர் மீது நம்பிக்கை வைத்து நாளை(dec-4/2022) நடைபெறும் பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரிலும் வாய்ப்பளித்துள்ளது.
ஆனால் பொறுமைக்கும் எல்லையுண்டு என்பது போல் இந்த தொடரே இவருக்கு கடைசி ஒரு வாய்ப்பாக இருக்கும் என கிரிக்கெட் வல்லுனர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் தெரிவித்து வருகின்றனர். ஒருவேளை ரிஷப் பண்ட் இந்த தொடரில் மோசமான ஆட்டத்தை மீண்டும் வெளிப்படுத்தினால் இத்தோடு ரிஷப் பண்டின் ஷார்டர் பார்மட் முடிவுக்கு வந்துவிடும் என முன்னாள் வீரர்கள் எச்சரித்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய கிரிக்கெட் குறித்து பல்வேறு விதமான கருத்துக்களை வெளிப்படையாக பேசி வரும் இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் பிரபல கிரிக்கெட் விமர்சகருமான ஆகாஷ் சோப்ரா, பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடர் ரிஷப் பண்ட்டின் எதிர்கால கிரிக்கெட்டை முடிவு செய்யும் முக்கியமான தொடராகும் என தன்னுடைய யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா தெரிவித்ததாவது, “நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் ரிஷப் பண்ட் துணை கேப்டானாக செயல்பட்டார். ஆனால் பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரில் அந்த ஒரு பதவியும் இவருக்கு கிடையாது, மேலும் இஷான் கிஷன், கே எல் ராகுல் போன்ற விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களும் அணியில் இடம் பெற்றுள்ளனர், இவர்களைத் தொடர்ந்து ஷிகர் தவானும் அணியில் உள்ளார்.
ரிஷப் பண்ட் எப்பொழுதும் டி20 தொடரை விட தன்னுடைய ஒரு நாள் தொடரின் ரெக்கார்ட் சிறப்பாக உள்ளதாக தெரிவித்து வருகிறார்.ஆனால் அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்பு கிடைத்தும் அதை ஒழுங்காக பயன்படுத்திக் கொள்ளவில்லை. தற்போது ரிஷப் பண்ட் கத்தியின் மீது நடப்பது போன்ற நிலையில் உள்ளார்.ஒருவேளை பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரில் மட்டும் இவர் சரிவர விளையாடவில்லை என்றால்,அவருடைய எதிர்காலம் எதிர்பார்ப்பது போல் சுமூகமாக அமைந்து விடாது” என எச்சரிக்கையுடன் கூடிய அறிவுரையை ஆகாஷ் சோப்ரா வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.