ரிஷப் பண்ட்டிற்கு இடம் கிடைக்குமா..? முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி இது தான்
வங்கதேச அணியுடனான முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன் குறித்து இங்கு பார்ப்போம்.
வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, வங்கதேச அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இதில் முதலில் நடைபெறும் ஒருநாள் தொடரின் முதல் போட்டி 4ம் தேதி நடைபெற உள்ளது. டி.20 உலகக்கோப்பையும், நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரையும் இழந்த இந்திய அணி, வங்கதேச அணியை அதன் சொந்த மண்ணில் எப்படி எதிர்கொள்ள போகிறது என்பதை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருப்பதால் இந்த தொடர் மீது எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்த போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனை பொறுத்தவரையில் துவக்க வீரர்களாக ரோஹித் சர்மாவும், ஷிகர் தவானும் இடம்பெறுவார்கள். மிடில் ஆர்டரில் விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் கே.எல் ராகுல் ஆகியோரும் இடம்பெறுவார்கள் என தெரிகிறது. ஷிகர் தவான் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருவதால் கே.எல் ராகுல் மிடில் ஆர்டரில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வரும் ரிஷப் பண்ட்டிற்கு வங்கதேச தொடரிலும் வாய்ப்பு மறுக்கப்படாது என்றே தெரிகிறது. இதனால் ரிஷப் பண்டே விக்கெட் கீப்பராக செயல்படுவார், ஒருவேளை இந்திய அணி கூடுதலாக ஒரு பந்துவீச்சாளர் தேவை என கருதும் பட்சத்தில், ரிஷப் பண்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டு கே.எல் ராகுல் விக்கெட் கீப்பராக செயல்படுவார்.
ஆல் ரவுண்டர்கள் வரிசையில் வாசிங்டன் சுந்தர் மற்றும் அக்ஷர் பட்டேல் ஆகியோர் இடம்பெறுவார்கள் என தெரிகிறது. பந்துவீச்சாளர்கள் வரிசையில் ஷர்துல் தாகூர், தீபக் சாஹர் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்;
ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர், கே.எல் ராகுல், ரிஷப் பண்ட், அக்ஷர் பட்டேல், வாசிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், தீபக் சாஹர், முகமது சிராஜ்.