இந்தியா மற்றும் வங்கதேசம் இரு அணிகளும் மோதும் தொடர் அடுத்த மாதம் முதல் வாரத்தில் துவங்க இருக்கிறது. இதில் முன்னணி ஆல்ரவுண்டர் ஆடுவது சந்தேகம் என கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளதால், அணிக்கு பெருத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
தற்போது இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணி டி20 தொடர் முடித்துவிட்டு, டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியில் ஆடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் வென்று இந்திய அணி தொடரை கைப்பற்றியது. தற்போது மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இந்நிலையில் இந்த தொடரை முடித்துவிட்டு, அடுத்ததாக வங்கதேச அணிக்கு எதிராக 3 டி20 போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி ஆட இருக்கிறது. போட்டிக்கான வங்கதேச அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.
வருகின்ற 24 ஆம் தேதி டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட இருக்கிறது. இதில் ஓய்வில்லாமல் ஆடி வரும் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. அதேபோல் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆபரேஷன் செய்துகொண்ட ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா ஆடமாட்டார்.
இதேபோல் வங்கதேச அணிக்கு கடந்த இரண்டு தொடர்களில் முன்னணி ஆல்-ரவுண்டராக வளம் வரும் சைப்புடின் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆடுவது சந்தேகம் என தகவல்கள் தெரிய வந்துள்ளன.
இவர் இதுவரை 13 டி20 போட்டிகளில் ஆடி 12 விக்கெட்டுகள் மற்றும் 108 ரன்களை அடித்துள்ளார். வங்கதேசம் ஆப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகள் மோதிய முத்தரப்பு தொடரில் சிறப்பாக செயல்பட்டார். அதேபோல் வங்கதேச உலக கோப்பை அணியில் இடம் பெற்றார்.
தற்போது இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரில் இவரது பெயர் இடம் பெற்றுள்ளது. இருப்பினும், ஆடுவது சந்தேகம் என்பதால் விரைவில் மாற்று வீரரை வங்கதேச கிரிக்கெட் வாரியம் அறிவுக்கும் என்ற தகவல்கள் வெளிவந்துள்ளன .