இவர் ஒருத்தர் அணியில் இருந்தால் போதும் இரண்டு பேருக்கு சமம் என மூத்த வீரர் குறித்து பேசியுள்ளார் வங்கதேச அணியின் கேப்டன்.
முதற்கட்டமாக, இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் மோதிய டி20 தொடர் முடிவுற்று, இதனை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனை அடுத்து, நவம்பர் 14 ஆம் தேதி துவங்கவிருக்கும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை எதிர்கொள்வதற்காக இந்திய வீரர்கள் முழு முனைப்புடன் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக, மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொல்கத்தாவில் முதல்முறையாக நடைபெறவிருக்கும் பகலிரவு டெஸ்ட் போட்டிக்காக இந்தூர் மைதானத்தில் பிங்க் பந்தைக் கொண்டு பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்திய அணிக்கு எதிரான தொடரில் வங்கதேச அணியின் மூத்த வீரர்கள் தமீம் இஃபால் மற்றும் ஷகிப் அல் ஹசன் இருவரும் இடம்பெறவில்லை. இதில், ஷகிப் அல் ஹசன் தன்னை அணுகிய சூதாட்டக்காரர்கள் யார் என்ற உண்மையை ஐசிசி விசாரணையில் கூற மறுத்ததால், ஐசிசி இவருக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதித்தது. அதில் ஓராண்டுகாலம் நிபந்தனை தடையும் விதித்துள்ளது.

கடைசி நேரத்தில் கேப்டன் பொறுப்பு மற்றும் அணியின் பட்டியலில் இருந்து ஷகிப் அல் ஹசன் நீக்கப்பட்டு டி20 போட்டிகளின் கேப்டனாக மஹமதுல்லா மற்றும் டெஸ்ட் அணிக்காக மோமினுல் ஹக்யூ இருவரும் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்பாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய மோமினுல் ஹக்யூ, அணியில் ஷகிப் அல் ஹசன் மற்றும் தமீம் இஃபால் முக்கியத்துவம் குறித்து பேசினார்.
பேட்டியில் அவர் கூறியதாவது:
மூன்று வீரர்களை இழப்பதாக நான் நினைக்கிறேன். ஏனென்றால் ஷாகிப் அல் ஹசன் இரண்டு வீரர்களுக்கு சமமானவர். அவர் இல்லாதது சவாலானதாக இருக்கும். இருந்தாலும், அதைப்பற்றி மிகப்பெரிய அளவில் சிந்திக்க வேண்டியதில்லை என்றார்.