ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களை சந்திக்க அழைப்பு விடுத்துள்ளது பிசிசிஐ.
இந்த வருடம் 50-ஓவர் உலகக்கோப்பை இந்தியாவில் நடைபெற இருக்கிறது. கடைசியாக 2011ஆம் ஆண்டு இந்திய அணி உலகக்கோப்பையை வென்றது. அதன்பிறகு ஐசிசி நடத்தும் போட்டிகளில் எதிர்பார்த்த செயல்பாடுகளை கொடுக்கவில்லை. ஏமாற்றம் மட்டுமே நிலவி வந்தது.
இந்த ஆண்டு அப்படி நடந்து விடக்கூடாது என்கிற முனைப்புடன் பிசிசிஐ பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது. சீனியர் வீரர்கள் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு கொடுக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களின் உடல்நிலை மற்றும் பணிச்சுமை ஆகியவை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது. காயத்திலிருந்து விலகி இருக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக பிசிசிஐ தரப்பிலிருந்து கூறப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் இந்திய வீரர்கள் சிலர் ஐபிஎல் போட்டிகளில் சரியாக விளையாடுகின்றனர். ஆனால் சர்வதேச போட்டிகள் என்று வரும் பொழுது காயம் ஏற்பட்டு விளையாட முடியாமல் வெளியில் இருக்கின்றனர். இதற்கு பிசிசிஐ உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கண்காணிக்க வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுத்தினர் மற்றும் முன்னாள் வீரர்கள், விமர்சனர்கள் பலரும் இதற்கு ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்த வருடத்தில் இருந்து இதற்கான ஏற்பாடுகளை பிசிசிஐ எடுக்க உள்ளதாக தெரிகிறது. இந்த வருடம் 50-ஓவர் உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் திட்டத்தில் இருக்கும் வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்கு எந்தவித தடையும் இல்லை. அவர்களுக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் திட்டத்தில் இருக்கும் வீரர்கள் ஐபிஎல் தொடர்களில் காயம் ஏற்படாமல் இருக்க பிசிசிஐ புதிய ஏற்பாடுகள் செய்திருக்கிறது. அதில் ஒன்றாக ஐபிஎல் போட்டிகளில் ஆடும் இந்திய வீரர்களின் உடல்நிலை குறித்து பிசிசிஐ-இன் இந்திய தேசிய அகடமி வாயிலாக அவ்வப்போது தெரிந்து கொள்ளவும் அறிவிப்புகளை பெறுவதற்கும் முடிவு செய்திருக்கிறது.
இதற்காக ஐபிஎல் அணி உரிமையாளர்களை அழைத்து பிசிசிஐ சந்திப்பு நடத்தவிருக்கிறது. அந்த சந்திப்பில் இந்த வருடம் 50-ஓவர் உலகக்கோப்பை மற்றும் அடுத்த வருடம் 20-ஓவர் உலகக்கோப்பை திட்டத்தில் இருக்கும் இந்திய வீரர்களின் உடல்நிலை பற்றியும் அவர்களின் செயல்பாடுகள் மற்றும் காயம் ஏற்படுவதற்கான அறிகுறி ஆகியவை பற்றி தொடரின் நடுவே விசாரணைகள் நடத்தப்படும். ஏதேனும் தடங்கல்கள் இருந்தால் உடனடியாக அணியிலிருந்து வீரர்கள் விலக்கப்பட்டு இந்திய தேசிய அகடமிக்கு வீரர்கள் திரும்பவேண்டும். இதற்கு வீரர்களும் ஐபிஎல் அணி நிர்வாகமும் ஒத்துழைக்க வேண்டும்.” என பேசப்பட உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.
வருகிற திங்கள்கிழமையன்று மும்பையில் ஐபிஎல் அணி உரிமையாளர்கள் மற்றும் பிசிசிஐ மேல்மட்ட குழுவினர் சந்திப்பு தகவல்கள் வந்துள்ளது.