விபத்துக்குள்ளான ரிஷப் பண்ட்-இன் மருத்துவ அறிக்கையை வெளியிட்டுள்ளது பிசிசிஐ.
அதிகாலை 5.30 மணி அளவில் டெல்லியில் இருந்து டேராடூன் அருகேயுள்ள தனது சொந்த ஊருக்கு காரில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, சாலை விபத்திற்கு உள்ளாகியுள்ளார் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட்.
உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கே ஆரம்பகட்ட சிகிச்சைகள் செய்து முடித்த பிறகு, டேராடூனில் உள்ள பெரிய மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். அங்கு முழுமையாக ஸ்கேன் செய்து பார்த்ததில் பல இடங்களில் ரிஷப் பண்ட் படுகாயம் அடைந்திருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.
ரிஷப் பண்ட் உடல்நிலையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் முழு அறிக்கையை பிசிசிஐக்கு கொடுத்துள்ளனர். அதனை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
மருத்துவர்கள் கொடுத்த அறிக்கையின் படி, ரிஷப் பண்ட்-டிற்கு தலைப்பகுதியில் இரண்டு ஆழமான வெட்டுக்காயங்கள் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு மணிக்கட்டில் வெளிப்புற காயம் இல்லை. ஆனால் உள்ளே எலும்பு பகுதியில் ஆழமாக அடிபட்டிருக்கிறது. வலது காலின் பாதத்தில் பலமாக அடிபட்டு இருக்கிறது. அதே காலில் மூட்டு பகுதியில் ஜவ்வு கிழிந்திருக்கிறது. முதுகு பகுதியில் ஆழமான கீறல்கள் மற்றும் உராய்வு காயங்கள் ஏற்பட்டிருக்கிறது.
இவை அனைத்தும் எப்போது குணமாகும்? அவருக்கு என்ன மாதிரியான சிகிச்சைகள் கொடுக்கப்பட உள்ளது? என்பது பற்றி இன்னும் தெரியவில்லை. தற்போது வரை இந்த அளவிற்கு மட்டுமே மருத்துவர்களால் தகவல்கள் வெளியிடப்பட்டிருக்கிறது.
மதியம் 2 மணி அளவில் தெரிவிக்கப்பட்ட தகவலின் படி, மயக்க நிலையில் இருந்த ரிஷப் பண்ட், எழுந்து மருத்துவர்களிடம் பேசியிருக்கிறார். இதுவும் ஆரோக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
ரிஷப் பண்ட் பற்றி பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது: “ரிஷப் பண்ட் விரைவில் குணமடைய நான் வேண்டிக்கொள்கிறேன். சிகிச்சைகள் கொடுத்து வரும் மருத்துவரிடம் பேசினேன். உரிய முறையில் சிகிச்சைகள் வழங்கப்படும் என உறுதியளித்தார். ஸ்கேன் செய்யப்பட்டதில், உயிருக்கு ஆபத்தில்லை என தெரியவந்தது மகிழ்ச்சி. திடமான மனநிலையில் ரிஷப் பண்ட் இருக்கிறார். சிகிச்சை முழுவதும் பிசிசிஐ அவருக்கு பக்கபலமாக இருக்கும்.” என்று தெரிவித்திருக்கிறார். மேலும், குடும்பத்தினரிடமும் இது குறித்து பேசியதாக பதிவிட்டிருக்கிறார்.