இந்திய வீரர்களுக்கான பயிற்சிமுகாம் தேதி வெளியீடு? – பிசிசிஐ அறிவிப்பு!
இந்திய வீரர்களுக்கான பயிற்சி முகாம் துவங்குமா? விதிமுறைகள் எவ்வாறு இருக்கும் என பிசிசிஐ பொருளாளர் அருண் துமல் விளக்கமளித்துள்ளார்.
இந்தியாலும் பரவிவரும் கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து ஐபிஎல் உட்பட விளையாட்டு போட்டிகளும் ரத்தாகின. கடந்த மார்ச் மாதம் தென் ஆப்ரிக்க அணி ஒருநாள் தொடரை ரத்து செய்து நாடு திரும்பிய பின் இந்திய வீரர்கள் எவ்வித போட்டிகளிலும் பங்கேற்க இயலாமல் வீட்டிலேயே முடங்கிக்கிடக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது.
மார்ச் மாத இறுதியில் நடக்கவிருந்த 13வது ஐ.பி.எல் சீசனும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இருப்பினும் விளையாட்டு வீரர்கள் விதிமுறைகளுடன்தங்களது பயிற்சிகளை மீண்டும் துவங்க மத்திய அரசு அனுமதித்தது.
இங்கிலாந்து, விண்டீஸ், ஆஸ்திரேலியா, இலங்கை வீரர்கள் ஆகிய நாடுகளின் வீரர்கள் தங்களது பயிற்சியை துவங்கிய நிலையில் இந்திய வீரர்கள் அதிகாரப்பூர்வமாக பயிற்சியை துவக்கவில்லை.
இதுகுறித்து பி.சி.சி.ஐ. தேசிய கிரிக்கெட் அகாடமி உடன் இணைந்து வீரர்களுக்கான பயிற்சியை எப்போது துவங்கலாம்? என ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது.
பி.சி.சி.ஐ. பொருளாளர் அருண் துமால் இதுகுறித்து கூறியதாவது:
“இந்திய அணி வீரர்களுக்கான பயிற்சி முகாமை துவங்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதற்காக எங்களது கிரிக்கெட் செயல்பாட்டு குழு, என்.சி.ஏ. பணியாளர்களுடன் பேசி வருகிறோம். முடிந்தவரை விரைவாக பயிற்சிகளை துவக்குவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
வீரர்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து வருவர். இவர்களை ஒருங்கிணைத்து, தேசிய அகாடமியில் உரிய பாதுகாப்புடன் பயிற்சிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இந்தியாவில் தற்போது விமானங்கள் இயக்கப்படுகின்றன. இவற்றின் சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட்டு, வீரர்களை 100 சதவீதம் பாதுகாப்பான இடத்தில் இணைத்து, பிறகு பயிற்சிகளை துவங்க வேண்டும். இதுகுறித்து யோசித்து தயாராகி வருகிறோம். பயிற்சிகள் எப்போது என கால நிர்ணயம் செய்வது கடினம்.” என்றார்.