ஐபிஎல் தொடரின் புதிய டைட்டில் ஸ்பான்சராக டாட்டா நிறுவனம் உள்ளே வந்திருக்கிறது. இதற்கான காரணம் குறித்து பிசிசிஐ விளக்கமும் கொடுத்திருக்கிறது.
ஐபிஎல் தொடரில் 2018 ஆம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரையிலான டைட்டில் ஸ்பான்சர் ஒப்பந்தத்தை விவோ நிறுவனம் எடுத்திருந்தது. ஆண்டொன்றுக்கு 340 கோடி ரூபாய் இதன்மூலம் பிசிசிஐக்கு வருமானம் வந்து கொண்டிருந்தது.
கடந்த 2020ஆம் ஆண்டு இந்தியாவில் ஏற்பட்ட சீனப் பொருட்கள் மீதான எதிர்ப்பை தொடர்ந்து, விவோ நிறுவனம் தற்காலிகமாக தனது டைட்டில் ஸ்பான்ஸர்-ஐ விலகிக்கொண்டது. இதனால் 2021ம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் சூதாட்ட நிறுவனம் ட்ரீம் 11 டைட்டில் ஸ்பான்சராக இருந்தது.
ஒரு ஆண்டு தடைபட்டதால், 2023 ஆம் ஆண்டுவரை விவோ நிறுவனத்திற்கு ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டது. இதற்கிடையில் டைட்டில் ஸ்பான்சர் ஒப்பந்தத்தில் இருந்து நிரந்தரமாக விலகி கொள்வதாக விவோ நிறுவனம் கடந்த வாரம் அதிகாரபூர்வமாக பிசிசிஐக்கு கடிதம் அனுப்பியது.
இதனைத்தொடர்ந்து புதிய டைட்டில் ஸ்பான்சராக யார் இருப்பார்? என்ற ஆலோசனைகள் தொடர்ந்து நிலவி வந்த நிலையில், இந்தியாவில் தொழில் துறையில் 100 வருட பாரம்பரியம் கொண்ட நிறுவனமான டாட்டா நிறுவனம், இதற்கு ஒப்பந்தம் ஆகியது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஆண்டு ஒன்றிற்கு 130 கோடி ரூபாய் பிசிசிஐக்கு கூடுதல் வருமானம் வர உள்ளது.
டாடா நிறுவனம் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுக்கான டைட்டில் ஸ்பான்சராக இருக்க உள்ளது. இந்த ஒப்பந்தத்தினால் ஆண்டு ஒன்றிற்கு 470 கோடி ரூபாய் பிசிசிஐக்கு வருமானம் வர உள்ளது. கடந்த முறை விவோ நிறுவனம் 340 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் ஆனது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து ஐபிஎல் நிர்வாகத்தின் தலைவர் பிரிஜேஷ் பட்டேல் கூறுகையில், “விவோ நிறுவனம் டைட்டில் ஸ்பான்சர் பொறுப்பில் இருந்து நிரந்தரமாக விலகியதாக கடிதம் அனுப்பியது. இதனால் புதிய டைட்டில் ஸ்பான்சராக டாட்டா நிறுவனம் உள்ளே வந்திருக்கிறது. பாரம்பரியமிக்க டாட்டா நிறுவனத்தை ஐபிஎல் தொடருக்கு வரவேற்பது பெருமிதம் கொள்கிறோம். மேலும் டாட்டா நிறுவனம் ஐபிஎல் தொடருடன் ஒப்பந்தத்தில் இருப்பது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்னதாக இந்த ஒப்பந்தம் நடந்திருக்கிறது.” என்றும் அவர் குறிப்பிட்டார்.