இந்தியாவிலும் விரைவில் அறிமுகமாகுகிறது பகல் இரவு டெஸ்ட் போட்டி
பகல் இரவு டெஸ்ட் போட்டி மிக விரைவில் இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்படும் என்று பி.சி.சி.ஐ., செயலாளர் அமிதாப் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின், சர்வதேச டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் இருந்தாலும், இதுவரை டெஸ்ட் போட்டியின் அடுத்த கட்டமான பகல் இரவு டெஸ்ட் போட்டியில் விளையாடியதில்லை. இந்தியாவை போல் வங்கதேசம் மற்றும் சமீபத்தில் டெஸ்ட் அந்தஸ்தை பெற்ற அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் அகிய நான்கு அணிகள் மட்டுமே இதுவரை பகல் இரவு டெஸ்ட் போட்டியில் விளையாடாமல் உள்ளன.
இந்நிலையில் இந்தியாவிலும் விரைவில் பகல் இரவு டெஸ்ட் போட்டிகள் விரைவில் நடத்தப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் அமிதாப் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் அணியுடனான டெஸ்ட் தொடர் மற்றும் தேதியை அறிவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் அமிதாப் சவுத்ரி இதனை அறிவித்துள்ளார்.
பிங்க் நிற பந்தில் நடைபெறும் இந்த பகலிரவு போட்டி கடந்த 2015ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் அறிமுகமானது. இந்த பகல் இரவு போட்டியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியே இதுவரை அதிகபட்சமாக பங்கேற்றுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி சர்வதேச அளவிலான பகல் இரவு போட்டியில் இதுவரை பங்கேற்கவில்லை என்றாலும், உள்ளூர் கிரிக்கெட் தொடரான துலீப் டிராபியில் நமது வீரர்கள் பிங்க் நிற பந்தில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.