சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து சச்சினின் ஜெர்ஸி எண்ணுக்கு ஓய்வு கொடுக்க பி.சி.சி.ஐ. முடிவு

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து சச்சின் பயன்படுத்திய ஜெர்ஸி எண்ணான 10-க்கு ஓய்வு கொடுக்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

சச்சின் டெண்டுல்கர், இந்திய கிரிக்கெட் அணிக்காக 24 ஆண்டுகள் விளையாடியுள்ளார். அவர் கடந்த 2013-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுப் பெற்றார். சச்சினை எந்த அளவுக்கு ரசிகர்கள் நேசிக்கிறார்களோ, அதே போன்று அவரது ஜெர்ஸி நம்பரான 10-க்கும் அதிக புகழ் உள்ளது. அது சச்சினின் தனி அடையாளமாகவே பார்க்கப்படுகிறது.
கடைசியாக 2012 மார்ச் மாதம் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடிய போது 10-ம் எண் கொண்ட ஜெர்ஸியை சச்சின் அணிந்திருந்தார். அதன்பின், அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுப் பெற்றுவிட்டதால், அதன்பின் சர்வதேச கிரிக்கெட்டில் அந்த எண்ணை யாரும் பயன்படுத்தாமல் இருந்து வந்தனர்.
இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் கொழும்புவில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்காக அறிமுகமான ஷர்துல் தாகூர் 10-ம் எண் ஜெர்ஸியை அணிந்து விளையாடினார்.
இதை சச்சின் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தனர். சமூக தளங்களில் பி.சி.சி.ஐ.யும், தாகூரையும் கிண்டல் செய்தனர். ஷர்துல், ‘சச்சினாக முயற்சி செய்கிறார்’ என்று விமர்சனம் செய்தனர். ஆனால், ஹர்பஜன் உள்ளிட்ட சில இந்திய வீரர்கள் ஷர்துலுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.
இதுகுறித்து ஷர்துல் விளக்கமளிக்கையில், ‘நியூமராலஜிக்காக தான் இந்த எண்ணை நான் உபயோகம் செய்தேன். எனது பிறந்த தேதி 16.10.1991. இதன் கூட்டுத் தொகை 28. 2+8 =10. இதனால் தான் 10-ம் எண்ணை பயன்படுத்தினேன்’, என்றார்.
இந்நிலையில், பிசிசிஐ நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘இந்த விவகாரம் தேவையில்லாமல் பெரிதுபடுத்தப்படுகிறது. இதனால், அந்த எண்ணை நீக்குவது சிறந்தது. இருப்பினும், இந்தியா ‘ஏ’ அணிக்காகவும், சர்வதேச அல்லாத போட்டிகளில் விளையாடும் போது வீரர்கள் இந்த எண்ணை பயன்படுத்திக் கொள்ளலாம் என பி.சி.சி.ஐ. வீரர்களை அறிவுறுத்தியுள்ளது’, என கூறியுள்ளார்.
இதனால் சர்வதேச கிரிக்கெட்டில் இனி எந்த இந்திய வீரரும் 10-ம் எண்ணை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.