பிசிசிஐயின் செகரட்டரி ஜெய்ஷா பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது இந்திய கிரிக்கெட் நிர்வாகம், ஐபிஎல் தொடர் போன்று பெண்களுக்கான தொடர் ஒன்றை உருவாக்குவதில் முயற்சி செய்து வருவதாக பேசியுள்ளார்.
உலகின் பிரபலமான தொடர்களில் ஒன்றாக கருதப்படும் இந்தியாவின் ஐபிஎல் தொடர் அதிக பணம் புழங்கும் தொடராகவும் இருந்து வருகிறது. அப்படி புகழ்பெற்ற இந்த ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு உலகின் பல்வேறு நாடுகளில் இருக்கும் வீரர்களும் ஆசைப்படுவார்கள். மேலும் இந்த ஐபிஎல் தொடரால் பல இளம் வீரர்கள் இந்திய அணிக்கு விளையாடும் தனது கனவை நனவாக்கி உள்ளார்கள்.

இந்த நிலையில் ஆண்களுக்கு நடைபெறும் ஐபிஎல் தொடர் போன்று பெண்களுக்கான ஐபிஎல் தொடர் நடக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பெண் கிரிக்கெட் வீராங்கனைகளான ஸ்மிருதி மந்தனா உட்பட பலரும் வேண்டுகோள் விடுத்தனர்.
இந்த நிலையில் அந்த ஆசை நிறைவேறும் படி பிசிசிஐயின் செக்கரட்டரி ஜெய்ஷா பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது ஐபிஎல் தொடர் போன்று பெண்களுக்கான தொடர் ஒன்று ஏற்பாடு செய்வதற்கு திட்டமிடப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

அதில், பெண்களுக்கான டி20 தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது இந்த நிலையில் ஐபிஎல் தொடர் போன்று பெண்களுக்கான ஒரு தொடரை ஏற்பாடு செய்வதற்கு திட்டமிடப்பட்டு வருகிறது, ஆனால் அதில் மூன்று அல்லது நான்கு அணிகள் வைத்து விளையாட முடியாது, இதனால் சர்வதேச வீராங்கனைகள் இணைப்பது மற்றும் பல்வேறு விதமான கூட்டங்கள் கூட்டி ஆலோசனை கேட்பது போன்ற நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. நிச்சயம் பெண்களுக்கான ஐபிஎல் தொடர் வரும் காலங்களில் நடைபெறும் என்று ஜெய்ஷா தெரிவித்திருந்தார்.
ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கான பிபிஎல் தொடர் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.