பஞ்சாப் அணிக்கு எதிரான இன்றைய போட்டியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அறிமுகமான சேட்டன் ஷக்கரியா தனது முதல் போட்டியிலேயே சர்ச்சையை சந்தித்துள்ளார்.
14வது ஐபிஎல் சீசனின் இன்றைய போட்டியில் கே.எல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதி வருகின்றன.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு கே.எல் ராகுலும், மாயன்க் அகர்வாலும் துவக்க வீரர்களாக களமிறங்கினர்.
கடந்த தொடரில் பஞ்சாப் அணியின் முக்கிய வீரராக திகழ்ந்த மாயன்க் அகர்வால் இந்த தொடரையும் சிறப்பாக துவங்குவார் என எதிர்பார்க்கபப்ட்ட நிலையில், மாயன்க் அகர்வாலோ 9 பந்துகளில் 14 ரன்கள் எடுத்த போது சேட்டன் சக்கரியாவின் பந்துவீச்சில் சஞ்சு சாம்சனிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார்.
மாயன்க் அகர்வாலின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் ஐபிஎல் அரங்கில் தனது முதல் விக்கெட்டை பதிவு செய்த சேட்டன் சக்கரியா, தனது மகிழ்ச்சியை கொண்டாடும் விதமாக ஆக்ரோஷமாக கத்தினார். ஆக்ரோஷமாக கத்துகையில் ஒரு சில கெட்ட வார்த்தைகளையும் சேட்டன் சக்கரியா உபயோகித்தது வீடியோவில் பதிவாகியுள்ளது.
முதல் போட்டியிலேயே ரசிகர்களை முகம் சுளிக்க வைக்கும் அளவிற்கு அமைந்துவிட்ட சேட்டன் சக்கரியாவின் இந்த செயலுக்கு சமூக வலைதளங்களில் கண்டனங்கள் குவிந்து வருகிறது.