ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மிக முக்கிய வீரரான ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் டி.20 தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ளார்.
இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து நடைபெற்று வரும் ஐபிஎல் டி.20 தொடரின் 14வது சீசன் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் துவங்கியது.
இந்த தொடரில் இதுவரை 5 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. பெங்களூர், கொல்கத்தா, பஞ்சாப் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய அணிகள் இதுவரை தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன.
இந்த தொடரின் நான்காவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொண்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, அந்த போட்டியில் 222 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்தி களமிறங்கி, வெற்றிக்கு மிக அருகில் வரை வந்து வெறும் 4 ரன்னில் வெற்றியை தவறவிட்டது.

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ருத்ரதாண்டவத்தை பார்த்த ரசிகர்கள் இந்த தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அனைத்து அணிகளுக்கும் சவாலாக திகழும் என எதிர்பார்த்த நிலையில், அந்த அணியின் மிக முக்கிய வீரர்களில் ஒருவரான ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ராஜஸ்தான் அணிக்கு மிகப்பெரும் பின்னடவை கொடுத்துள்ளார்.
சமகால கிரிக்கெட் உலகின் தலைசிறந்த ஆல் ரவுண்டரான பென் ஸ்டோக்ஸின் இடது கையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஸ்டோக்ஸ், நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து முழுமையாக விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரரான கிரிஸ் கெய்லுக்கு கேட்ச் பிடித்த போது ஏற்பட்ட காயம் காரணமாக, அந்த போட்டியில் பந்துவீசாத பென் ஸ்டோக்ஸ், பேட்டிங்கிலும் சரியாக செயல்படாமல் வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்து வெளியேறினார்.

கையில் ஏற்பட்ட காயத்தை பரிசோதித்து பார்க்கையில் அவருக்கு இடது கையில் முறிவு ஏற்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளதால் பென் ஸ்டோக்ஸ் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து முழுமையாக விலகும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அடுத்த ஒரு வாரம் இந்தியாவிலேயே பென் ஸ்டோக்ஸ் தங்கியிருந்து, வியாக்கிழமை எக்ஸ்ரே எடுத்து பார்த்துவிட்டு இங்கிலாந்து புறப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பென் ஸ்டோக்ஸிற்கு ஏற்பட்டுள்ள காயத்தின் தன்மை குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகத்திடம் கேட்டறிந்ததாகவும், அவரை உடனடியாக நாடு திரும்பும்படி அறிவுறுத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பென் ஸ்டோக்ஸ் ஐபிஎல் தொடரில் இருந்து விலகும் பட்சத்தில் அது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு மிகப்பெரும் பின்னடைவை கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.