உலக கோப்பை இறுதி போட்டியில் நடந்தது போல் சூப்பர் ஓவர் சமன் ஆனால் பவுண்டரிகளை கணக்கிடுவதற்கு பதிலாக, இதை செய்யலாம் என இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளர் பரத் ஸ்ரீதர் புதிய யோசனை ஒன்றை தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் நடந்து முடிந்த ஒருநாள் போட்டிக்கான உலகக் கோப்பை தொடரின் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய இறுதிப் போட்டி பெரும் சர்ச்சையை கிளப்பியது. இரு அணிகளும் மோதிய இப்போட்டி 50 ஓவர்களின் முடிவில் சமனில் முடிந்தது. இதனால் வெற்றியாளர்களை தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. அதிலும் இரு அணிகள் தலா 15 ரன்கள் எடுத்ததால் சமனானது.
விதிமுறைப்படி, அதிக பவுண்டரிகள் அடித்த அணி வெற்றி என்ற அடிப்படையில், இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.
உலகின் தலைசிறந்த அணியை தேர்ந்தெடுக்கும் இறுதிப்போட்டியில் இப்படி ஒரு மோசமான விதிமுறையை கடைபிடிப்பது சரியல்ல. லீக் போட்டிகளில் இதுபோன்ற விதிமுறை சரியாக இருக்கலாம்; ஆனால், இறுதிப் போட்டியில் இது சற்றும் ஏற்றுக் கொள்ளப்படாது என கிரிக்கெட் வல்லுனர்களும், பல விமர்சனர்களும், முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தொடர்ந்து முன் வைத்து வந்தனர்.
மேலும் பல ஜாம்பவான்கள் புதிய யோசனைகளையும் தெரிவித்தனர். சச்சின் டெண்டுல்கர் ஒரு சூப்பர் ஓவர் சமனில் முடிவடைந்தால், இன்னொரு முறை சூப்பர் ஓவர் வைத்து முடிவு எடுக்கலாம் என தெரிவித்தார்.
தற்போது இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளர் பரத் ஸ்ரீதர் இதற்கு புதிய யோசனை ஒன்றை தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “சச்சின் டெண்டுல்கர் கூறிய இரண்டாவது சூப்பர் ஒவர் முறையும் நன்றாக இருக்கிறது. அதேபோல் 50 ஓவர்கள் முடிவில் எந்த அணி குறைவான விக்கெட்டை இழந்துள்ளதோ அவர்களே வெற்றியாளர்களாக இருப்பர்.
ஏனெனில், ரன்களை அடித்தது மட்டுமல்லாமல் விக்கெட்டுகளை காப்பாற்றிக் கொள்வதும் முக்கியமான ஒன்று. ஆதலால், அவர்களே வெற்றிக்கு தகுதியானவர்கள். பவுண்டரிகள் குறைவாகவோ அதிகமாகவோ இறுதியில் இரு அணிகளும் அடித்த ரன்கள் ஒன்றே. அதனால் பவுண்டரி முறையை ஐசிசி மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்றார்.