விண்டீஸ் ஒருநாள் தொடரில் இருந்து முன்னணி இந்திய வேகப்பந்து வீச்சாளர் காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்கு பதிலாக புதிய வீரர் அறிவிக்கப்பட்டுள்ளது
மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் ஆடி வருகிறது.
முதல் கட்டமாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடந்து முடிந்தது. இதனை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அடுத்ததாக, வருகிற 15-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முதல் ஒருநாள் போட்டி துவங்க இருந்தது.
இந்நிலையில் பயிற்சியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளார் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார்.

இவருக்கு பதிலாக சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் ஷ்ரதுல் தாகூர் இந்திய அணியில் மாற்று வீரராக சேர்க்கப்பட்டிருக்கிறார்.
ஏற்கனவே துவக்க வீரர் ஷிகர் தவான் சையத் முஷ்டக் அலி தொடரில் ஏற்பட்ட காயம் காரணமாக ஒருநாள் மற்றும் டி20 தொடர் இரண்டில் இருந்தும் விலகி இருந்தார்.
டி20 தொடரில் தவானுக்கு பதிலாக சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்டார். தற்போது ஒருநாள் தொடரில் தவானுக்கு பதிலாக துவக்க வீரர் மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
வேகப்பந்து வீச்சாளர் பும்ரா கால் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகியிருந்தார். இவர் இரண்டாவது ஒருநாள் போட்டியில் இருந்து அணியில் இணைவார் என்ற தகவல்களும் பிசிசிஐ தரப்பிலிருந்து வெளி வருகின்றன.