பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டி.20 போட்டியில் இங்கிலாந்து வீரர் லியம் லிவிங்ஸோடன் இமாலய சிக்ஸர் அடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டி.20 போட்டி நேற்று நடைபெற்றது.

இங்கிலாந்தின் லீட்ஸில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஜாஸ் பட்லர் 59 ரன்கள் எடுத்து மிக சிறப்பான துவக்கம் கொடுத்தார்.
இதன்பின் டேவிட் மாலன் 1 ரன்னில் விக்கெட்டை இழந்து வெளியேறினாலும், அதன்பின் கூட்டணி சேர்ந்த லிவிங்ஸ்டோன் மற்றும் மொய்ன் அலி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி மளமளவென ரன் சேர்த்தனர்.

மொய்ன் அலி 16 பந்துகளில் 36 ரன்களும், லிவிங்ஸ்டன் 23 பந்துகளில் 3 சிக்ஸருடன் 38 ரன்களும் எடுத்து அசத்தினர். இதில் லிவிங்ஸ்டன் அடித்த ஒரு சிக்ஸர் மைதானத்தை தாண்டி வெளியில் சென்று, ரக்பி மைதானத்தில் சென்று விழுந்தது. லிவிங்ஸ்டன் அடித்த இந்த சிக்ஸர் 122 மீட்டர் வரை சென்றுள்ளதாக கூறப்படுவதால், இதுவே கிரிக்கெட் வரலாற்றில் அடிக்கப்பட்ட மிகப்பெரிய சிக்ஸர் என்ற அளவிற்கு பேசப்பட்டு வருகிறது. அதே போல் லிவிங்ஸ்டன் சிக்ஸர் அடித்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மொய்ன் அலி மற்றும் லிவிங்ஸ்டனின் அதிரடி ஆட்டத்தின் மூலம் இங்கிலாந்து அணி 200 ரன்கள் எடுத்து, பாகிஸ்தான் அணிக்கு 201 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
Biggest six ever?! 😱 @LeedsRhinos, can we have our ball back? 😉
— England Cricket (@englandcricket) July 18, 2021
Scorecard/clips: https://t.co/QjGshV4LMM
🏴 #ENGvPAK 🇵🇰 pic.twitter.com/bGnjL8DxCx
இதன்பிறகு களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் மட்டுமே எடுத்ததால், 45 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வியும் அடைந்துள்ளது.
இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி.20 தொடரில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளன. கடைசி டி.20 போட்டி நாளை (ஜூலை 20) நடைபெற உள்ளது.