வீடியோ; அவுட் ஆகாமலே மைதானத்தை விட்டு வெளியேறிய யுவராஜ் சிங்
சர்வதேச போட்டிகள் மற்றும் ஐபிஎல் ஆகியவற்றிலிருந்து அண்மையில் ஓய்வு பெற்ற யுவராஜ் சிங், கனடா டி20 லீக் தொடரில் டொரண்டோ நேஷனல்ஸ் அணிக்காக ஆடிவருகிறார்.
டொரண்டோ நேஷனல்ஸ் அணி யுவராஜ் சிங்கை கேப்டனாக நியமித்தது. நேற்று தான் கனடா டி20 லீக் தொடர் தொடங்கியது. முதல் போட்டியிலேயே யுவராஜ் சிங் தலைமையிலான டொரண்டோ நேஷனல்ஸ் அணியும் கிறிஸ் கெய்ல் தலைமையிலான வான்கூவர் நைட்ஸ் அணியும் மோதின.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய டொரண்டோ நேஷனல்ஸ் அணியின் சீனியர் வீரர்களான பிரண்டன் மெக்கல்லம், யுவராஜ் சிங் ஆகியோர் சொதப்பினார். ஆனால் தொடக்க வீரர் ரோட்ரிகோ தாமஸ் 31 பந்துகளில் 41 ரன்களையும் தென்னாப்பிரிக்க வீரர் கிளாசன் 20 பந்துகளில் 41 ரன்களும் அடித்தனர். கடைசியில் அதிரடி மன்னன் பொல்லார்டு 13 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 30 ரன்களை விளாசினார். இவர்கள் மூவரின் அதிரடியான பேட்டிங்கால் டொரண்டோ நேஷனல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 159 ரன்கள் அடித்தது.
160 ரன்கள் என்ற இலக்குடன் இறங்கிய வான்கூவர் நைட்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் கெய்ல் மற்றும் வைசீ ஆகிய இருவரும் சோபிக்கவில்லை. ஆனால் அதன்பின்னர் வால்டனும் வாண்டெர் டசனும் ஜோடி சேர்ந்து அபாரமாக ஆடினர். இருவருமே சிறப்பாக ஆடி அரைசதம் அடித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்று போட்டியை வெற்றிகரமாக முடித்துவைத்தனர். வால்டன் 59 ரன்களும் வாண்டெர் டசன் 65 ரன்களும் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இவர்களின் அதிரடியான பேட்டிங்கால் 18வது ஓவரிலேயே இலக்கை எட்டி அசால்ட்டாக வெற்றி பெற்றது வான்கூவர் நைட்ஸ் அணி.
இந்த போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட யுவராஜ் சிங், டைமிங் கிடைக்காமல் திணறினார். அவரால் இறங்கியது முதலே சரியாக ஆடமுடியவில்லை. களத்தில் எந்த சூழலிலும் அவரால் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. 27 பந்துகள் ஆடி வெறும் 14 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். சரியாக அடிக்க முடியாத விரக்தியில், என்ன செய்கிறோம் என்பது தெரியாமல் அவுட்டே இல்லாததற்கு அவராகவே வெளியேறினார். பவுலர் வீசிய பந்தை அடிக்காமல் விட, அந்த பந்தை விக்கெட் கீப்பர் பிடிக்காமல் விட்டார். அந்த பந்து விக்கெட் கீப்பரின் கையில் பட்டு ஸ்டம்பில் பட்டது. விக்கெட் கீப்பரின் கையில் பட்டு பந்து ஸ்டம்பில் அடித்தபோது யுவராஜ் சிங் கிரீஸுக்குள் தான் இருந்தார். பந்து ஸ்டம்பில் அடித்து கீழே விழுந்த பின்னர் தான் அவர் காலை கிரீஸை விட்டு வெளியே நகற்றினார்.
Playing for Toronto Nationals in opening match of Global T20 Canada,Yuvraj Singh walked off despite being not out.The 37-year-old was stumped in Vancouver Knights' bowler Rizwan Cheema's over after wicketkeeper dropped catch on stumps.Yuvraj was still in crease as per the replays pic.twitter.com/KztPLtQoI1
— tv9gujarati (@tv9gujarati) July 26, 2019
அதனால் அவர் அவுட்டே இல்லை. ஆனால் விக்கெட் கீப்பர் அம்பயரிடம் அப்பீல் செய்துகொண்டிருக்கும்போது அவராகவே பெவிலியனுக்கு நடையை கட்டினார். அது அவுட்டா இல்லையா என்பதை அம்பயரோ, டிவி அம்பயரோ தீர்மானிக்கும் வரை காத்திருந்திருக்கலாம். ஆனால் ஏற்கனவே அடிக்கமுடியாமல் திணறிவந்த யுவராஜ், இதுதான் வாய்ப்பு என கருதி நடையை கட்டிவிட்டாரா என்னவோ..?