ஐபிஎல் தொடரில் இவர் தான் மிகவும் வேகமான பந்துவீச்சாளர் என இந்திய பவுலரை புகழ்ந்திருக்கிறார் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷான் டெய்ட்.
ஐபிஎல் தொடர் துவங்க இன்னும் இரண்டு வார காலமே இருக்கும் நிலையில் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பும் எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், யார் இந்த வருடம் ஐபிஎல் கோப்பையை வெல்வார்? பேட்டிங்கில் யார் சிறப்பாக செயல்படுவார்? மற்றும் பந்து வீச்சில் ஆதிக்கம் செலுத்தப்போவது யார்? என பலரும் பலவித கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிரட் ஹாக், இந்த வருடம் ஐபிஎல் கோப்பையை பெங்களூரு அணி வருவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது என கணித்திருக்கிறார். அதே போல் இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் வரிசை பலம் மிக்கதாக இருக்கிறது. அவர்கள் இந்த ஐபிஎல் தொடரில் ஆதிக்கம் செலுத்துவர் என கணித்திருக்கிறார்.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷான் டெய்ட், “இந்த வருடம் ஐபிஎல் கோப்பையை மும்பை அணி வெல்வதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.” என ஆணித்தரமாக தெரிவித்திருக்கிறார். மேலும் ஐபிஎல் தொடரை பொறுத்தவரை அதிக வேகமாக பந்து வீசுபவர்களில் முதன்மையானவர் மும்பை இந்தியன்ஸ் வீரர் ஜஸ்பிரித் பும்ரா என்று புகழாரம் சூட்டியிருக்கிறார்.
இதுகுறித்து ஷான் டெய்ட் பேசுகையில், “ஜஸ்பிரித் பும்ராவிற்கு பேட்ஸ்மேன்கள் பலர் நடுங்குகின்றனர். பந்துவீச்சில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் இவர், மும்பை அணிக்கு சிறப்பாக செயல்படுவதோடு மட்டுமல்லாமல், இந்திய அணியிலும் மூன்று வித கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடி வருகிறார்.
மும்பை அணிக்காக கடந்த 2013ஆம் ஆண்டிலிருந்து விளையாடிவரும் பும்ரா இதுவரை 82 விக்கெட்டுகளை ஐபிஎல் தொடரில் வீழ்த்தி இருக்கிறார். இந்த வருடம் ஐபிஎல் தொடரிலும் பந்துவீச்சில் ஆதிக்கம் செலுத்த முழு முனைப்புடன் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.