சூர்யகுமார் யாதவ் உள்ளூர் போட்டிகளில் மிக சிறப்பாக விளையாடுவது மட்டுமல்லாமல் ஐபிஎல் தொடரில் சமீப சில ஆண்டுகளாகவே மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். அதன் காரணமாக அவருக்கு இந்த ஆண்டு துவக்கத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த டி20 தொடரில் விளையாடும் வாய்ப்பு வழங்கப்பட்டது. தனக்கு கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு மிக சிறப்பான ஆட்டத்தை இந்திய அணிக்கு வெளிப்படுத்தினார்.
தற்போது அவர் இலங்கையில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட தயாராகிக் கொண்டிருக்கிறார். சூர்யகுமார் யாதவ் மிகச்சிறந்த வீரர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். நிச்சயமாக அவர் உலக கோப்பை டி20 தொடரில் இடம் பெறுவார் என்று அனைத்து ரசிகர்களும் எதிர்பார்த்து வருகின்றனர். ஆனால் அவரது இடத்தில் விளையாட ஸ்ரேயாஸ் ஐயரும் தற்போது தயாராகி கொண்டு வருகிறார்.
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இடது கை தோள்பட்டையில் காயம் அடைந்த பின்னர் அறுவை சிகிச்சை எடுத்துக் கொண்டு தற்போது நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார். சமீபத்தில் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் நான் பங்கேற்கும் போகிறேன் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
எனவே இந்த இரு வீரர்களில் எந்த வீரரை உலக கோப்பை தொடரில் இந்திய அணியில் விளையாட வைப்பது என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது
இதற்கு பதிலளிக்கும் விதமாக இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் வர்ணனையாளர் ஆகாஷ் சோப்ரா இதற்கு பதில் கூறியிருக்கிறார்.

இனி வரும் போட்டிகளில் அவர்களது ஃபார்ம் தான் முடிவு செய்யும்
ஸ்ரேயாஸ் ஐயர் காயத்திலிருந்து குணமாகி தற்போது விளையாட தயாராகிவிட்டார். டெல்லி அணியில் மீதமுள்ள 6 போட்டிகளில் அவர் விளையாடப் போவது தற்போது உறுதியாகியுள்ளது. மறுபக்கம் சூர்யகுமார் யாதவ் இலங்கைக்கு எதிரான தொடரில் அனைத்து போட்டிகளிலும் விளையாட போகிறார். மேற்கொண்டு ஐபிஎல் போட்டிகளிலும் மும்பை அணியில் அவர் நிச்சயமாக இடம் பெற்று விளையாடுவார்.
எனவே உலக கோப்பை டி20 தொடரில் ரோஹித் ஷர்மா மற்றும் கேஎல் ராகுல் / ஷிகர் தவான் ஓபனிங் வீரர்களாக களம் இறங்கினால், மூன்றாவது வீரராக விராட் கோலி களமிறங்கி விளையாடுவார். ஐந்தாவது, ஆறாவது மற்றும் ஏழாவது இடத்தில் ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா மற்றும் ரவிந்திர ஜடேஜா நிச்சயமாக விளையாடுவார்கள் அதில் எந்தவித சந்தேகமும் கிடையாது.

இப்பொழுது மிகப்பெரிய கேள்வி 4-வது வீரராக சூர்யகுமார் யாதவ் விளையாடுவாரா அல்லது ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடுவாரா என்பதுதான். என்னைப் பொறுத்தவரையில் இதற்கு பதில் தற்போது கூறிவிட முடியாது, இனி வரும் போட்டிகளில் அவர்கள் எப்படி விளையாடுகிறார்களோ அதை பொருத்துதான் அவர்களது இடம் தீர்மானிக்கப்படும் என்று ஆகாஷ் சோப்ரா இறுதியாக கூறி முடித்தார்.
இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் ஜூலை 18-ஆம் தேதி துவங்கப்பட்டு ஜூலை 29ம் தேதி வரை நடைபெற உள்ளது. மறுபக்கம் ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி முதல் தொடங்கி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளதும் குறிப்பிடத்தக்கது.