ரஞ்சிக்கோப்பையில் ஹைதராபாத் அணிக்கு எதிராக இரட்டை சதம் அடித்திருக்கிறார் அஜிங்க்யா ரகானே.
உள்ளூர் டெஸ்ட் தொடரான ரஞ்சிக்கோப்பை 2022/23 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பி குரூப்பில் இடம்பெற்றுள்ள ஹைதராபாத் மற்றும் மும்பை இரு அணிகளும் மோதி வருகின்றன.
ஹைதராபாத் அணிக்கு எதிராக முதல் இன்னிசில் முதலில் பேட்டிங் செய்து வரும் மும்பை அணிக்கு, துவக்க வீரர் ஜெய்ஸ்வால் 162 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். சூரியகுமார் யாதவ், வழக்கம் போல தனது அதிரடியை வெளிப்படுத்தி 80 பந்துகளில் 90 ரன்கள் அளித்து அவுட் ஆனார்.
இந்திய அணிக்கு துணை கேப்டன் மற்றும் தற்காலிக கேப்டனாக இருந்து வந்த அஜிங்க்யா ரகானே மோசமான ஃபார்மில் இருந்தார் என அடுத்தடுத்த டெஸ்ட் தொடர்களில் அவரை வெளியேற்றியது இந்திய அணி நிர்வாகம். தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்து வரும் ரகானே ரஞ்சிக்ப்பையை பயன்படுத்தி இரட்டை சதம் அடித்திருக்கிறார். மும்பை அணியின் கேப்டனாக இருந்து வரும் ரகானே, அணியை நன்றாகவும் வழிநடத்தி வருகிறார்.
தற்போது இந்திய அணியில் துணை கேப்டன் ஆக இருந்து வரும் கேஎல் ராகுல் மோசமான பார்மில் இருப்பதால், ரகானே இப்படி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது என பேச்சுக்கள் அடிபடுகிறது.
இந்நிலையில் புதிதாக வரும் தேர்வுக்குழுவினர் ரகானேவின் இந்த பார்மை கருத்தில் கொண்டு மீண்டும் அவரை இந்திய அணிக்குள் எடுப்பார்களா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் காண வேண்டும்.
ஹைதராபாத் அணிக்கு எதிரான இந்த டெஸ்டில் ரகானே 261 பந்துகளில் 204 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார். இதில் மூன்று சிக்ஸர்கள் மற்றும் 17 பவுண்டரிகள் அடங்கும். மற்றொரு மும்பை வீரர் சர்ப்ராஸ் கான் சதம் அடித்து அசத்தினார். கடந்த போட்டியிலும் இவர் சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது.
சர்பராஸ் கான் 123 ரன்கள் அடித்து ஆட்டம் இழக்காமல் தற்போது வரை களத்தில் இருந்து வருகிறார். மும்பை அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 636 ரன்கள் அடித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.