காயத்தால் அவதிப்பட்டு வந்த பந்துவீச்சாளர் ஆடம் மில்னே நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அறிவித்துள்ளது.
ஐபிஎல் தொடரின் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த தொடரில் மிக மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
நடப்பு தொடரை படுதோல்வியுடன் துவங்கிய சென்னை அணி, தொடர்ச்சியாக நான்கு தோல்விகளை சந்தித்தது. சென்னை அணிக்கா இந்த நிலைமை என ரசிகர்கள் அதிர்ச்சியடைந்திருந்த நிலையில், வழக்கம் போல் பெங்களூர் அணி, சென்னை அணிக்கு ஒரு வெற்றியை கொடுத்தது. பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, குஜராத் அணியுடனான அடுத்த போட்டியில் மீண்டும் தோல்வியை சந்தித்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இந்த தொடர் தோல்விகளுக்கு தீபக் சாஹர் இல்லாதது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அதே போல் சென்னை அணியில் எடுக்கப்பட்டிருந்த ஆடம் மில்னேவும் காயத்தால் அவதிப்பட்டு வந்ததால் அவரது இடத்தை சரி செய்யவும் சென்னை அணி திணறி வந்தது.
நடப்பு தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக வெறும் ஒரு போட்டியில் மட்டும் விளையாடிய ஆடம் மில்னே, தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அடுத்தடுத்த போட்டிகளில் விளையாடவில்லை.
இந்தநிலையில், தற்போது வரை காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாத ஆடம் மில்னே நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அறிவித்துள்ளது.
NEWS – Matheesha Pathirana joins Chennai Super Kings as a replacement for Adam Milne.
More details – https://t.co/7QAzI8bhBk #TATAIPL | @ChennaiIPL
— IndianPremierLeague (@IPL) April 21, 2022
ஆடம் மில்னேவிற்கு பதிலாக இலங்கையை சேர்ந்த மத்தீஷா பதிரனா என்னும் வீரர் சென்னை அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அறிவித்துள்ளது. இலங்கை அணியின் ஜாம்பவான்களில் ஒருவரான லசீத் மலிங்காவின் பந்துவீச்சு ஸ்டைலை போன்றே பந்துவீசக்கூடியவரான மத்தீஷா பதிரனா தற்போது 19வயதுக்குட்பட்டோருக்கான இலங்கை அணிக்காக விளையாடி வருகிறார். இவரை சென்னை அணி அவரது அடிப்படை விலையான 20 லட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்துள்ளது.