கைல் ஜெமிசனுக்கு மாற்று வீரராக தென் ஆப்பிரிக்கா அணியின் வேகப்பந்துவீச்சாளர் மற்றும் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் சிசன்டா மகலாவை எடுத்திருக்கிறது சிஎஸ்கே அணி.
நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் கைல் ஜெமிசன், நடந்து முடிந்த ஐபிஎல் மினி ஏலத்தில் ஒரு கோடி ரூபாய்க்கு சிஎஸ்கே அணிக்கு எடுக்கப்பட்டார். துரதிஷ்டவசமாக ஜனவரி மாதம் முதுகுப்பகுதியில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக மருத்துவ சிகிச்சையில் இருக்கிறார்.
காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர், இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் பங்கேற்கவில்லை. பல வாரங்களுக்கு இவரால் கிரிக்கெட் விளையாட முடியாது எனக் கூறப்பட்டதால், ஐபிஎல் தொடரில் இருந்தும் விலகினார்.
ஐபிஎல் தொடர் துவங்குவதற்கு ஓரிரு வாரங்களே இருப்பதால் கைல் ஜெமிஷனுக்கு மாற்று வீரரை தேடும் பணியில் சிஎஸ்கே அணி நிர்வாகம் தீவிரமாக இறங்கியது. இவரை எடுக்கப் போகிறார்கள்! அவரை எடுக்க போகிறார்கள்! என்று பல கணிப்புகள் வந்தது.
தொடர்ந்து மவுனம் காத்துவந்த சிஎஸ்கே நிர்வாகம் தற்போது புதிய வீரரை அறிவித்துள்ளது. தென் ஆப்பிரிக்கா அணியைச் சேர்ந்த சீசன்டா மகலா, சிஎஸ்கே அணிக்கு மாற்றுக் வீரராக எடுக்கப்பட்டிருக்கிறார்.
ஆரம்பவிலையான 50 லட்சம் ரூபாய்க்கு இவரை சிஎஸ்கே அணி நிர்வாகம் எடுத்திருக்கிறது. கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் இவர் பங்கேற்றார். எந்த அணியும் இவரை எடுப்பதற்கு முன்வரவில்லை.
ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற டி20 லீக்கில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்காக விளையாடினார். சன்ரைசர்ஸ் அணி கோப்பையை வென்றது. அதில் சிசன்டா 8.68 எகனாமியுடன் 14 விக்கெட்டுகளை கைப்பற்றினார். வழக்கமாக, டெத் ஓவர்களில் அதிக விக்கெட் எடுக்கக்கூடிய இவர், இந்த சீசனில் பாதிக்கு பாதி விக்கெட்டுகளை பவர்பிளே ஒவர்களில் எடுத்தார்.
2021ஆம் ஆண்டுக்கு பிறகு சர்வதேச டி20 போட்டிகளில் இவர் பங்கேற்கவில்லை என்றாலும், தென் ஆப்பரிக்கா டி20 லீகில் அபாரமாக செயல்பட்டதால் சிஎஸ்கே அணி நிர்வாகம் நம்பிக்கை வைத்து எடுத்திருக்கிறது.