ஆஸ்திரேலியாவில் எங்களது வெற்றிக்கான சூத்திரம் இதுதான்! புஜாரா ஓபன் டாக்!
இரண்டு வருடங்கள் கழித்து இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாட போகிறது. டெஸ்ட் டி20 ஒருநாள் என அனைத்து விதமான போட்டிகளிலும் விளையாடவதற்காக தற்போது தயாராகி வருகிறது. இதற்கு முன்னர் 2018 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா மண்ணிற்கு சென்று விளையாடியபோது 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்று வரலாற்று சிறப்புமிக்க சாதனை படைத்தது.

70 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியாவிற்கு இந்த வெற்றி கிடைத்தது. இந்த தொடரில் இந்தியாவின் டெஸ்ட் வீரர் புஜாரா 3 சதம் உட்பட 521 ரன்கள் அடித்திருந்தார். இந்த வருட டெஸ்ட் தொடரிலும் புஜாரா இடம் பெற்றிருக்கிறார். இந்நிலையில் இந்த தொடர்பு குறித்து பேசிய அவர் கூறுகையில்..
பந்தை சேதப்படுத்தி சர்ச்சையில் சிக்கிய ஸ்டீவன் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் 2018ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணியில் இடம்பெறவில்லை. தற்போது அவர்கள் இருப்பதால் அந்த அணியின் பேட்டிங் வரிசை முன்பை விட சற்று வலிமையானதாக இருக்கிறது. எனவே ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் எளிதில் வெற்றி பெற்று விடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கக் கூடாது.
வெளிநாட்டு மண்ணில் வெற்றி பெறவேண்டுமென்றால் மிகக் கடுமையாக உழைக்க வேண்டியது எப்போதும் அவசியமானதாகும். ஸ்மித், வார்னர் ஆகிய தலைசிறந்த வீரர்கள் இருக்கின்றனர். எங்களது அணியில் இடம் பிடித்து இருக்கும் வேகப்பந்து வீச்சாளர்களும் பெரும்பாலும் கடந்த டெஸ்ட் தொடரிலும் ஆடியவர்கள்.

கடந்த முறை வெற்றியை அவர்கள் ருசித்திருக்கிறார்கள். எனவே ஆஸ்திரேலிய மண்ணில் வெற்றி பெற என்ன செய்யவேண்டும் என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும். அதற்கான திட்டத்தை தற்போது எங்களது பந்து வீச்சாளர்கள் வகுத்துக் கொண்டிருப்பார்கள் அப்படி தீட்டப்படும் திட்டத்தை நாங்கள் மிகச்சரியாக செயல்படுத்தினால் ஸ்டீவன், ஸ்மித் டேவிட் வார்னர் ஆகியோரை எளிதில் வீழ்த்திவிடுவார்கள்.
கடந்த முறை செயல்பட்டடவது போல் இந்த முறையும் சிறப்பாக செயல்பட வேண்டும். ஆனால் இந்த முறை பகல் இரவு டெஸ்ட் போட்டி இருக்கிறது. மின்னொளியில் ஆடும்போது அதற்கேற்றபடி நம்மை விரைவில் பழகிக்கொள்ளவேண்டும் என்று தெரிவித்திருக்கிறார் புஜாரா .