ஆஸ்திரேலியா அணியில் தற்போது கேப்டன் பொறுப்பு குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கள் நிலவி வருகிறது. இதில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தனது கருத்தை தெரிவித்திருக்கிறார்.
ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணி வரலாறு காணாத வகையில் இரண்டாவது முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது. இதில் சென்றமுறை ஆஸ்திரேலிய அணியில் முன்னணி வீரர்கள் இல்லாததால் தோல்வியை தழுவியது என காரணங்கள் கூறப்பட்டுள்ளன. ஆனால் இம்முறை பல முன்னணி வீரர்களும் இடம்பெற்றிருந்தனர். அதேநேரம் இந்திய அணியில் காயங்களால் பலரும் அவதிப்பட்டு வெளியேறிய நிலையில் இரண்டாம்தர அணியை வைத்து ஆஸ்திரேலிய அணியை முடித்துக்கட்டி தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் வென்றிருக்கிறது.
இந்திய அணிக்கு எதிரான தொடரில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் சரிவர செயல்படவில்லை என தொடர்ந்து விமர்சனங்கள் வந்துள்ளன. தற்போது இதுகுறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கருத்து தெரிவித்திருக்கிறார்.
“பெயின் தனக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை சரிவர பயன்படுத்தவில்லை. அதனால் அணியில் அடுத்து தயாராகிவரும் சிறந்த வீரர்களில் பேட் கம்மின்ஸ் முன்னிலை வகிக்கிறார். அவருக்கு இந்த கேப்டன் பொறுப்பை கொடுத்தால் நன்றாக இருக்கும். இந்திய அணி தொடரை கைப்பற்றிய போதும் தொடர் நாயகன் விருதை பேட் கம்மின்ஸ் பெற்றிருக்கிறார். அணியில் அவரது செயல்பாடு எந்த அளவிற்கு இருக்கிறது என்று நன்றாக புரிகிறது. ஆகையால் அவருக்கு இந்த கேப்டன் பொறுப்பை கொடுப்பது சரியாக இருக்கும் என நம்புகிறேன்.
அதே நேரம் முன்னணி வீரர்களான ஸ்மித், வார்னர், ஹேசல்வுட் ஆகியோரையும் இவர் நன்றாக கையால்வார். 3 அணிகளுக்கும் இவரை கேப்டன் பொறுப்பில் நியமித்தால் மிகவும் சரியாக இருக்கும்.” என்றார்.