ஓவல் மைதானத்தில் தன் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆடிவரும் அலிஸ்டர் குக் 2வது இன்னிங்சில் சாதனை சதம் எடுத்தார், கரகோஷம் அடங்க நீண்ட நேரம் ஆனது.
96 ரன்களில் இருந்த அலிஸ்டர் குக், சற்றே பதற்றமாகக் காணப்பட்டார். அப்போது ரவீந்திர ஜடேஜா பந்தை பாயிண்டுக்கும் கவருக்கும் இடையில் சிங்கிளுக்குத்தான் தட்டிவிட்டார் குக், பந்தை எடுத்த பும்ரா ரன் அவுட் செய்யும் நோக்கத்துடன் ரன்னர் முனையில் ஸ்டம்பை நோக்கி எறிய தடுக்க ஆளில்லை பவுண்டரி ஆகி மொத்தம் 5 ரன்களாகி குக் சதம் எடுத்தார்.
“97வது ரன்னுக்காக கட் ஷாட் ஆடினேன். இன்னும் 3 ரன்கள் தேவை என்று நினைத்த போது, பும்ரா த்ரோவைப் பிடிக்கும் நிலையில் ஜடேஜா இல்லை.
ஓவர் த்ரோ பவுண்டரிக்குச் சென்ற போது எனக்கு நிறைய மனவலி குறைந்தது. பும்ராவும் எனக்கு இந்தத் தொடரில் தன் பந்து வீச்சு மூலம் மனவேதனை அளித்தார். அவரே அந்த ஓவர் த்ரோ செய்து எனக்கு சதம் வழங்கியது மகிழ்ச்சியளிக்கிறது, இதற்காக அவருக்கு நான் நன்றி கூறுகிறேன்.
ஜோ ரூட் ஒன்றும் கூறாமல் புன்னகைத்தார். ஆனால் கரகோஷம் இப்படிப் பார்த்ததில்லை. இவ்வளவு நீண்ட நேர கரகோஷத்தை நான் பார்த்ததில்லை. 10 நிமிடங்கள் நீடித்த கரகோஷம், இது மிகவும் சிறப்பானது.
கடந்த சில நாட்களாக என் உணர்வுகளை வர்ணிக்க இயலவில்லை. மிகவும் ஆழ் மன எதார்த்தமான ஒரு 4 நாட்கள் என்றே கூற வேண்டும். கடைசி 2 ஓவர்களின் போது பாமி ஆர்மி பாட்டை ரசிகர்கள் பாடியது மகிழ்ச்சியளித்தது.
மிகவும் சுயநலப்பார்வையிலிருந்து கூறினால் இதற்கு மேல் என்ன கிடைத்து விடப்போகிறது. காரணம் என் நண்பர்கள், உறவினர்கள், பெட்ஃபோர்ட்ஷயரிலிருந்து நிறைய விவசாயிகள் என்று அனைவரும் இருக்கும் போது ஒரு சதம், அதற்கான கொண்டாட்டங்கள், பாராட்டுகள் என்னைத் திக்குமுக்காடச் செய்தன” என்றார் அலிஸ்டர் குக்.