லண்டன் ஓவலில் நடைபெறும் 5வது டெஸ்ட் போட்டியில் கவுரவ வெற்றிக்காக இந்திய அணி போராடி வருகிறது, கடைசி டெஸ்ட் போட்டியில் ஆடும் குக்கிற்கு வெற்றியையே பிரியாவிடை பரிசாக அளிக்க இங்கிலாந்து நிச்சயம் முனைப்புடன் ஆடும்.
அலிஸ்டர் குக் இந்தத் தொடரில் தன் அதிகபட்ச ரன்களை அடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் தற்போது 95 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் எடுத்து ஆடி வருகிறார்.
உலகம் முழுதும் குக்கிற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன, மைதானத்தில் குக்கின் ஒவ்வொரு ரன்னும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நம் ரஹானே அவருக்கு எதிர்பாராத விதமாக ‘பரிசு’ ஒன்றை அளித்து ‘ட்ரீட்’ கொடுத்தார்.
உணவு இடைவேளை முடிந்த கையோடு இஷாந்த் சர்மா பந்து வீசினார். அது ஒரு அருமையான பந்து, வலது கை வீச்சாள்ர் ஓவர் த விக்கெட்டிலிருந்து இடது கை பேட்ஸ்மெனுக்கு வீசும் ஒரு கோணமான பந்து அது, குட் லெந்தில் பிட்ச் ஆகி வெளியே ஸ்விங் ஆக, குக் மட்டையில் பட்டு பந்து வைடு ஸ்லிப்பில் தள்ளி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரஹானேவின் கைக்கு வந்தது, கொஞ்சம் தாழ்வாக வந்தது, பிடித்திருக்கக் கூடிய அளவில் வாகாக வந்ததுதான்.
ஆனால் தவறவிட்டார் ரஹானே. கடைசி டெஸ்ட் போட்டியில் சதம் காணும் முனைப்புடன் ஆடிவரும் குக்கிற்கு இது ரஹானே கொடுத்த ட்ரீட்தானே!!
இஷாந்த் சர்மா மிகச்சிறப்பாக வீசி 10 ஓவர்கள் 6 மெய்டன்கள் 12 ரன்களை மட்டுமே கொடுத்துள்ளார். ஒரு விக்கெட்டுக்கு அதுவும் குக்கின் கடைசி டெஸ்ட் போட்டியில் அவர் விக்கெட்டை வீழ்த்துவதற்குத் தகுதியானவரே இஷாந்த் சர்மா. ஆனால் ரஹானே கையில் வந்த கேட்சை விட்டு ஒரு நல்ல பரிசை வழங்கினார்.
இது நடந்து சிறிது நேரத்துக்கெல்லாம் மொயின் அலி 2 ரன்களில் இருந்த போது பும்ரா பந்து எட்ஜ் ஆக கோலிக்கு இடது புறம் கடினமான வாய்ப்பு. அவரும் டைவ் அடித்தார் ஆனால் கேட்ச் ஆக்க முடியவில்லை.
ஆகவே குக்கிற்கு ரஹானே ட்ரீட் கொடுத்ததையடுத்து அவரது பார்ட்னருக்கும் விராட் கோலி ஒரு வாய்ப்பைத் தவற விட்டு துணை ட்ரீட் அளித்தார்.
குக் தற்போது 39 ரன்களுடனும் மொயின் அலி 10 ரன்களுடனும் களத்தில் நிற்கின்றனர் இங்கிலாந்து 78/1.