கோஹ்லியை விட இவர் தான் சிறந்த வீரர்…முன்னாள் வீரர் சொல்கிறார்
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோஹ்லியை விட தென் ஆப்ரிக்காவின் 360 டிகிரி மேன் டிவில்லியர்ஸ் தான் சிறந்த வீரர் என்று தென் ஆப்ரிக்கா அணியின் முன்னாள் வீரர் கிரேம் போலாக் தெரிவித்துள்ளார்.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்காவுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவில், இந்திய அணி இரண்டு போட்டியிலும் தோல்வியடைந்து, 2-0 என்ற கணக்கில் தொடரையும் இழந்தது.
இந்திய அணி தொடரை இழந்ததை தொடர்ந்து, இந்திய அணியை பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்திய அணியின் தோல்விக்கு இது தான் காரணம் என்று முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் பலர் தங்களுக்கு தோன்றுவதை கூறி வருகின்றனர்.
மேலும் சிலர், கேப்டன் கோஹ்லி சிறந்த கிரிக்கெட் வீரரா, அவர் இந்திய அணியின் கேப்டனாக தொடர்வது இந்திய அணிக்கு நல்லதா என்ற கோணத்திலும் விவாதம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தென் ஆப்ரிக்கா அணியின் முன்னாள் வீரரான கிரேம் பொல்லாக், ஒருநாள் அரங்கை பொறுத்தவரை கோஹ்லியை விட டிவில்லியர்ஸ் தான் சிறந்த வீரர் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய பொல்லாக் “ தென் ஆப்ரிக்கா அணியுடனான டெஸ்ட் தொடரை இழந்ததற்கு ஆடுகளம் தான் காரணம் என்று இந்திய வீரர்கள் சாக்கு சொல்லாதது மகிழ்ச்சி அளிக்கிறது. வேறு எதற்காக இல்லையென்றாலும் இதற்காகவாவது இந்திய கேப்டன் கோஹ்லியை பாராட்டியே ஆக வேண்டும். சர்வதேச டெஸ்ட் போட்டிகளை பொறுத்த வரையில் கோஹ்லி சிறந்த வீரராக இருக்கலாம் ஆனால் ஒருநாள் மற்றும் டி.20 போட்டிகளை பொறுத்தவரையில் டிவில்லியர்ஸ் அடைந்திருக்கும் உச்சத்தை கோஹ்லியால் நெருங்க கூட முடியாது என்பதே நிதர்சனமான உண்மை” என்று தெரிவித்துள்ளார்.