சென்னை அணியின் தொடர் தோல்விகளுக்கு கேப்டன்சியில் தோனியின் தலையீடு அதிகம் உள்ளது தான் காரணம் என முன்னாள் வீரர்கள் பலர் பேசி வரும் நிலையில், ஹர்பஜன் சிங்கோ வித்தியாசமான கருத்தை ஒன்றை அழுத்தமாக பதிவு செய்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த தொடரை மிக மோசமாக துவங்கியுள்ளது. முதல் போட்டியில் கொல்கத்தாவிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்த சென்னை அணி, அடுத்ததாக நடைபெற்ற லக்னோ அணிக்கு எதிரான போட்டியிலும் 6 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.
முதல் இரண்டு போட்டிகளிலும் படுதோல்வியடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பு தொடரின் 11வது போட்டியில் மாயன்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது.
இந்த போட்டியில் சென்னை அணி டாஸில் வென்றதாலும், பஞ்சாப் அணியை 180 ரன்களில் கட்டுப்படுத்தியதாலும், சென்னை அணி இந்த போட்டியில் அசால்டாக வெற்றி பெறும் என்றே எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் சென்னை அணியோ இந்த போட்டியில் படு மோசமாக பேட்டிங் செய்து 54 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.
நடப்பு தொடரில் ஹாட்ரிக் தோல்வியை சென்னை அணி பதிவு செய்துள்ளது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள், இந்நாள் வீரர்கள் என பலரும் சென்னை அணியின் தொடர் தோல்விகள் குறித்தான தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
சென்னை அணியின் தோல்வி குறித்து பேசிய பார்த்தீவ் பட்டேல், அஜய் ஜடேஜா போன்ற சில முன்னாள் வீரர்கள், தோனி தேவையில்லாமல் ஜடேஜாவின் கேப்டன்சியில் தலையிடுவதே சென்னை அணிக்கு பின்னடைவை கொடுத்து வருவதாக தெரிவித்திருந்த நிலையில், மற்றொரு முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங்கோ, ஜடேஜாவால் தான் தோனிக்கே தேவை இல்லாத தலைவலி ஒவ்வொரு போட்டியிலும் ஏற்படுவதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஹர்பஜன் சிங் பேசுகையில், “களத்தில் இப்பொழுதும் தோனியே கேப்டனாக செயல்படுகிறார். சென்னை அணியின் கேப்டனான ஜடேஜா தனக்கும் கேப்டன் பதவிக்கும் சம்பந்தமே இல்லாததை போன்று பவுண்டரி லைனில் பீல்டிங் செய்து வருகிறார். பவுண்டரி லைனில் பீல்டிங் செய்தால் எந்த கேப்டனாலும் தனது அணியை வழிநடத்த முடியாது, எனவே ஜடேஜாவால் தோனிக்கு தான் தேவையற்ற தலைவலி என்றே எனக்கு தோன்றுகிறது. ஜடேஜாவின் வேலையை வேறு வழியின்றி தோனி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. ஜடேஜா இது போன்று தனது சுமையை மற்றவர் மீது சுமத்திவிட்டு விட்டு இருக்கக்கூடாது. தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள முடியும். ஜடேஜா அதீத நம்பிக்கையுடைய வீரர். எனவே அவரால் சென்னை அணியை சிறப்பாக வழிநடத்த முடியும், ஜடேஜா அதற்கு துணிந்து முன்வர வேண்டும். தோனி விளையாடும் இந்த தொடரிலேயே அவரிடம் இருந்து நிறைய விசயங்களை கற்றுக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.