காலில் காயம் ஏற்பட்டு ஐபிஎல் போட்டிகளில் விளையாட முடியாமல் அவதிப்பட்டு வரும் பென் ஸ்டோக்ஸ், கிட்டத்தட்ட ஒரு மாதகாலம் விளையாடமாட்டார் என்பதை சிஎஸ்கே அணியின் தலைமைச் செயலர் அதிகாரி காசி விசுவநாதன் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற ஐபிஎல் மினி ஏலத்தில் 16.25 கோடி ரூபாய் கொடுத்து சிஎஸ்கே அணிக்கு எடுக்கப்பட்டார் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ். மார்ச் மாதம் இறுதியில் சிஎஸ்கே அணியுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டார்.

அப்போது பென் ஸ்டோக்ஸ் சில போட்டிகள் பௌலிங் செய்ய முடியாது, காலில் பிரச்சனை இருக்கிறது. ஆகையால் முழு பேட்ஸ்மேனாக மட்டுமே ஆடுவார் என்று அணி நிர்வாகத்தினர் தகவல் தெரிவித்தனர். இது ரசிகர்களுக்கு ஏமற்றமாகவே இருந்தது.
இதனையடுத்து முதல் லீக் போட்டியில் குஜராத் அணிக்கு எதிராக பென் ஸ்டோக்ஸ் சிஎஸ்கே அணிக்கு அறிமுகமாகினார். லக்னோவிற்கு எதிரான இரண்டாவது லீக் போட்டியில் யாரும் எதிர்பாராதபோது பௌலிங் செய்தார். ரசிகர்களுக்கு இதனால் சிறிது ஆறுதல் கிடைத்தது.

துரதிஷ்டவசமாக, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பு பயிற்சியில் ஈடுபட்டிருந்த பென் ஸ்டோக்ஸ்-க்கு குதிகாலில் காயம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டிகளில் இவர் விளையாடவில்லை.
மீண்டும் எப்போது அணிக்கு திரும்புவார் என்று பலரும் கேள்விகள் எழுப்பிவந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விசுவநாதன் சமீபத்தில் அளித்த பேட்டியில் பென் ஸ்டோக்ஸ் மற்றும் மகேந்திர சிங் தோனி ஆகியோரின் உடல்நிலை குறித்த சில அப்டேட்கள் கொடுத்திருக்கிறார்.

“பென் ஸ்டோக்ஸ் காயம் கிட்டத்தட்ட குணமடைந்து விட்டது. ஆனால் அவரை வைத்து ரிஸ்க் எடுக்க முடியாது. இறுதிக்கட்ட லீக் போட்டிகள் மற்றும் பிளே-ஆப் போட்டிகளுக்கு மிக முக்கியமான வீரர் அவர். ஆகையால் அவர் கிட்டத்தட்ட ஒருமாத காலம் விளையாடமாட்டார். அதிகபட்சமாக வருகிற ஏப்ரல் 30ஆம் தேதி பிளேயிங் லெவனுக்குள் வந்துவிடுவார் என எதிர்பார்க்கலாம்.” என்று அப்டேட் கொடுத்தார்.
“மகேந்திர சிங் தோனி காலில் சிறுசிறு பிரச்சனைகள் தான். அடுத்த போட்டிக்குள் அவர் சரியாகி விளையாடுவார். சந்தேகமே வேண்டாம்” என்றும் கூறினார்.
கடைசியாக ஏப்ரல் மூன்றாம் தேதி நடந்த லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் பென் ஸ்டோக்ஸ் விளையாடினார். அதன்பிறகு ஆறு லீக் போட்டிகளை தவறவிட்டு ஏப்ரல் 30ஆம் தேதி பஞ்சால் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் விளையாடுகிறார் என கூறப்படுகிறது. ஒருமாத காலம் ஐபிஎல் போட்டிகளில் விளையாடாத இவரையா, இத்தனை கோடிகள் கொடுத்து எடுத்தீர்கள்? என்று ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
