சதேகமே வேண்டாம்… அடுத்த 3 வருசத்துக்கு இவர் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன்; சுரேஷ் ரெய்னா சொல்கிறார்
தோனிக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் யார் என்ற விவாதம் குறித்தான தனது கருத்தை முன்னாள் கிரிக்கெட் வீரரான சுரேஷ் ரெய்னா ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.
இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது. மொத்தம் 15 சீசன்கள் இதுவரை நிறைவடைந்துள்ள நிலையில், 16வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது.
மொத்தம் 70 போட்டிகள் கொண்ட இந்த தொடர் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. அடுத்த சில தினங்களில் லீக் சுற்றுகள் நிறைவடைய இருந்தாலும், இதுவரை எந்த அணியுமே அதிகாரப்பூர்வமாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை. குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய இரு அணிகளே ப்ளே ஆஃப் வாய்ப்பை கிட்டத்தட்ட நெருங்கியுள்ளன. மற்ற அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்காக கடுமையாக போராடி வருகின்றன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்று வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டாலும், தோனி திடீரென ஓய்வை அறிவித்துவிடுவாரோ அல்லது கேப்டன் பதவியில் இருந்து விலகி விடுவாரோ என்ற அச்சம் சென்னை ரசிகர்கள் மத்தியில் எழாமல் இல்லை. தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகிவிட்டாலோ, அல்லது ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வை அறிவித்துவிட்டாலோ, சென்னை அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற விவாதமும் தற்போதே நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில், இது குறித்து பேசியுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரரான சுரேஷ் ரெய்னா, ருத்துராஜ் கெய்க்வாட் சென்னை அணியின் அடுத்த கேப்டனாக நியமிக்கப்பட்டால் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை என தெரிவித்துள்ளார்.
இது குறித்து சுரேஷ் ரெய்னா பேசுகையில், “தோனி இந்த தொடருடன் கேப்டன் பதவியில் இருந்து விலகிவிட்டால், ஜடேஜா சென்னை அணியின் அடுத்த கேப்டனாக நியமிக்கப்படுவார் என கருதுகிறேன். ஆனால் இளம் வீரரான ருத்துராஜ் கெய்க்வாட் அடுத்த கேப்டனாக நியமிக்கப்பட்டாலும் அதில் ஆச்சரியப்பட ஒன்றுமே இல்லை. அடுத்த மூன்று வருடம் அவர் சென்னை அணியை வழிநடத்தவும் வாய்ப்பு உள்ளது என்றே கருதுகிறேன், ஏனெனில் ஒரு கேப்டனுக்கு தேவையான அனைத்து தகுதிகளும், திறமைகளும் ருத்துராஜ் கெய்க்வாட்டிம் உள்ளது” என்று தெரிவித்தார்.